கால்பந்து: இந்தியா ஏமாற்றம் * ஆசிய கோப்பை தகுதிச்சுற்றில்…

பெர்த்: ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா. நேற்று 1-3 என சீன தைபேவிடம் தோல்வியடைந்தது.

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன் நடக்கிறது. 12 அணிகள் மூன்று பிரிவுகளாக பங்கேற்கின்றன. இதில் ‘டாப்-6’ இடம் பெறும் அணிகள் உலக கோப்பை தொடருக்கு (2027, பிரேசில்) நேரடியாக தகுதி பெறலாம்.

‘சி’ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, முதல் இரு போட்டியில் வியட்நாம் (1-2), ஜப்பானிடம் (0-11) தோற்றது. நேற்று தனது கடைசி

போட்டியில் இந்திய அணி, சீன தைபேவை சந்தித்தது. இப்போட்டியில் குறைந்தது 2 கோல் வித்தியாத்தில் வென்றால் காலிறுதிக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கலாம் என களமிறங்கியது இந்தியா.

12வது நிமிடத்தில் சீன தைபே வீராங்கனை சு யு சுவான் ஒரு கோல் அடித்தார். 39 வது நிமிடத்தில் இந்தியாவின் மணிஷா, முதல் கோல் அடிக்க ஸ்கோர் 1-1 என ஆனது. முதல் பாதியில் ஸ்டாப்பேஜ் நேரத்தில் எதிரணிக்கு ‘பெனால்டி’ வாய்ப்பு கிடைத்தது. இதில் எதிரணி வீராங்கனை அடித்த பந்து, கோல் போஸ்ட் மீது பட்டுத் திரும்பியது. அப்போது இந்திய கோல் கீப்பர் சானு மீது பட்டு, வலைக்குள் செல்ல, ‘சேம் சைடு’ கோல் ஆனது. சீன தைபே 2-1 என முந்தியது.

இரண்டாவது பாதியில் இந்திய வீராங்கனைகள் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. மறுபக்கம் சீன தைபே அணியின் சென் யு சின், 77 வது நிமிடம் ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோற்றது. பங்கேற்ற 3 போட்டியில் ஏமாற்றிய இந்தியா, பட்டியலில் கடைசி இடம் பெற்று, வெளியேறியது.

Source link