புதுடில்லி: காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால், சிறு ஹோட்டல்கள் மூடப்படுவதால் ஏராளமான ஹோட்டல் ஊழியர்கள் வேலை

புதுடில்லி: காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால், சிறு ஹோட்டல்கள் மூடப்படுவதால் ஏராளமான ஹோட்டல் ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.

டில்லி மாநகர் முழுதும் பல இடங்களில் சிறு ஹோட்டல்கள் காஸ் சிலிண்டர் கிடைக்காமல் நேற்று மூடப்பட்டன. பெரிய ஹோட்டல்களில் உணவு வகைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன.

உணவு வகைகள் அத்தியாவசிய உணவு வகைகள் மட்டும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் விற்பனை செய்யப்படுகின்றன. அதேநேரத்தில், ஹோட்டல் ஊழியர்கள் ஏராளமானோர் வேலை இழந்துள்ளனர்.

தேசிய ஹோட்டல்கள் சங்க கவுரவ பொருளாளர் மன்பிரீத் சிங் கூறியதாவது:

குழாய் வழியாக வினியோகம் செய்யப்படும் இயற்கை எரிவாயுக்கு மாற ஹோட்டல் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். குறைந்த அளவில் காஸ் தேவைப்படும் உணவு வகைகள் மட்டுமே தற்போது தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இதேநிலை தொடர்ந்தால், பெரும்பாலான ஹோட்டல்கள் மூடப்பட்டு, ஊழியர்கள் வேலையை இழந்து விடுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், இந்திரபிரஸ்தா எரிவாயு லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காஸ் பயன்பாடு இல்லாமல் எந்தெந்த உணவு வகைகளை தயாரிக்க முடியும் என்பதை மக்கள் அடையாளம் காண வேண்டும்.

‘காஸ் வினியோகம் எப்போது சீராகும் என்பதை இன்றைய நிலையில் உறுதியாக சொல்ல முடியாது. எனவே, பொதுமக்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் தற்போதைய நிலைக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

மோடியின் தவறு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:

காஸ் மற்றும் மின்சாரம் ஆகியவை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் ஒரு கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுதும் காஸ் சிலிண்டர் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். நம் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் காஸ், 90 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் வருகிறது.

அடுத்த இரண்டு நாட்களில், டில்லி மாநகர் முழுதும் 50 சதவீத ஹோட்டல்கள் மூடப்படும் நிலையில் உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பல ஆண்டுகால அணிசேரா வெளியுறவுக் கொள்கையை தகர்த்து ஈரானை நம் நாட்டின் எதிரியாக்குகிறார்.

அணிசேரா கொள்கையை தகர்த்ததன் வாயிலாக பிரதமர் மோடி பெரிய தவறு செய்து விட்டார். நாம் யாருடனும் கூட்டணி வைத்திருக்கக் கூடாது. போர் துவங்குவதற்கு ஒரு நாள் முன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு மோடி ஆதரவாக நின்றார்.

பனிப்போர் காலத்திலும் கூட, அணிசேரா வெளியுறவுக் கொள்கையை நம்நாடு பின்பற்றி வந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link