புதுடில்லி: “குரு தேவ் பஹதுார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் சஞ்சய் காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லுாரி ஆகியவற்றில், இரண்டு சிறப்பு மருத்துவப் படிப்புகள் துவக்கப்படும்,” என, டில்லி அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் பங்கஜ் குமார் சிங் கூறினார்.
டில்லி அரசின் சுகாதார துறை அமைச்சர் பங்கஜ் குமார் சிங், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
அரசு மருத்துவமனைகளில் சிறப்பு பயிற்சி படிப்புகளை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. டில்லி மக்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்க, திறமையான மருத்துவப் பணியாளர்களை உருவாக்கும் வகையில் பயிற்சி படிப்புகள் அறிமுகம் செய்யப்படுகிறது.
முதற்கட்டமாக, குரு தேவ் பஹதுார் அரசு மருத்துவக் கல்லுாரியில் மகளிர் மருத்துவ புற்றுநோயியல் பெல்லோஷிப் மற்றும் சஞ்சய் காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லுாரியில் குடும்ப மருத்துவம் ஆகிய படிப்புகள் விரைவில் துவக்கப்படும்.
மகளிர் மருத்துவ புற்றுநோயியல் பெல்லோஷிப் படிப்பு, இந்திய மகளிர் மருத்துவ புற்றுநோயியல் நிபுணர்கள் சங்கத்துடன் இணைந்து துவக்கப்படுகிறது. புற்றுநோயை கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளிப்பதில் சிறப்பு நிபுணத்துவத்தை வளர்ப்பதில் இந்த படிப்பு முக்கியத்துவம் வகிக்கும்.
தேசிய தேர்வு வாரிய அங்கீகாரம் பெற்ற பின், சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் கூடுதலாக நான்கு எம்.பி.பி.எஸ்., இடங்களுடன் குடும்ப மருத்துவம் படிப்பு துவக்கப்படும்.
ஆரம்பநிலை மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பயிற்சி பெற்ற குடும்ப மருத்துவ நிபுணர்களை அதிகரிப்பதே இந்த படிப்பின் நோக்கம்.
டில்லியில் மருத்துவக் கல்வியை வலுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மருத்துவக் கல்லுாரி இயக்குநர் தலைமையிலான நிபுணர் குழுவால் இந்தப் படிப்புகளுக்கான திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு, முதல்வரின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
