காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பீதி; மின் அடுப்புக்கு கடும் 'கிராக்கி'

– நமது நிருபர் –

வீடுகளுக்கு வினியோகிக்கப்படும், காஸ் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு வரலாம் என, தகவல் பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ‘இன்டக்ஸன் ஸ்டவ்’ எனப்படும், மின்சார அடுப்பு வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக, ‘சேப்டோ, பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட், பிக்பாஸ்கட்’ போன்ற முன்னணி ‘ஆன்லைன் டெலிவரி’ செயலிகளில், மின்சார அடுப்புகள் தீரும் நிலையில் உள்ளன. வெளியூரில் தங்கி படிக்கும் மாணவர்கள், வேலை பார்க்கும் இளைஞர்கள், ஹோட்டல்கள் மூடப்பட்டால், உணவுக்கு சிக்கல் என்பதால், சமைப்பதற்கு மின்சார அடுப்புகள் வாங்கி வருகின்றனர். இதன் காரணமாக, அனைத்து கடைகளிலும், மின்சார அடுப்பு விற்பனை சூடு பிடித்துள்ளது.

இது குறித்து, வியாபாரிகள் கூறியதாவது: காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற பயத்தில், மக்கள் மின்சார அடுப்பு வாங்க, ஆர்வம் காட்டுகின்றனர். அவரவர் விருப்பத்திற்கேற்ப, 1,600 ரூபாயில் இருந்து 4,500 ரூபாய் வரை, மின்சார அடுப்புகளை வாங்குகின்றனர். முன்பு, ஒரு நாளைக்கு ஐந்து மின்சார அடுப்பு விற்பனையாகும். தற்போது விற்பனை இரண்டு மடங்காக, சில கடைகளில் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.

டீக்கடை வைத்திருப்போரும், மின்சார அடுப்புகளை வாங்கி செல்கின்றனர். மின்சார அடுப்பும், அதில் சமைப்பதற்கு தேவையான பாத்திரங்களும், தடையின்றி கிடைத்தால், விற்பனையில் பிரச்னை இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link