வாஷிங்டன்: இந்தியா உள்பட 16 நாடுகளில் புதிய வர்த்தக விசாரணையை அமெரிக்க அரசு துவங்கியுள்ளது. நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டால் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரஸ்பர வரி என்ற அடிப்படையில் உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகளை, பொருளாதார அவசரநிலையைப் பயன்படுத்தி அந்நாட்டு உச்சநீதிமன்றம் அண்மையில் ரத்து செய்தது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியா உள்ளிட்ட முக்கிய வர்த்தக உறவு நாடுகளில் புதிய வர்த்தக விசாரணையை நடத்தவும் டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த விசாரணையின் முடிவில் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டால், அந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிக்க வழிவகை செய்யும்.
இந்தியா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், மெக்சிகோ, ஜப்பான், தென் கொரியா, தைவான், சுவிட்சர்லாந்து, நார்வே, இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, கம்போடியா, வியட்நாம் மற்றும் வங்கதேசம் ஆகிய 16 நாடுகளில் புதிய வர்த்தக விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விசாரணையை துவக்கிய அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் கூறுகையில், ‘வெளிநாடுகள் தங்கள் உள்நாட்டுத் தேவையை விட அதிகமாக உற்பத்தி செய்து, அதை அமெரிக்கச் சந்தையில் கொட்டுவதால், அமெரிக்க நிறுவனங்களின் முதலீடும் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. எங்கள் நாட்டின் தொழில்துறையை சிதைப்பதை இனி அமெரிக்கா அனுமதிக்காது. அமெரிக்க தொழிலாளர்களுக்கு நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே அதிபர் டிரம்பின் முக்கிய நோக்கம்,’ என்றார்.
