டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து மூடியே வைத்து இருப்போம் எனவும், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க படை

டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து மூடியே வைத்து இருப்போம் எனவும், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க படை தளங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடக்கும் எனவும் ஈரானின் புதிய ஆட்சியாளர் மொஜ்தபா கமேனி கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகளின் தாக்குதலில் ஈரானின் ஆட்சியாளராக இருந்த கமேனி கொல்லப்பட்டார். இதனையடுத்து அவரது மகன் மொஜ்தபா கமேனி புதிய ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் ஈரான் மக்கள் முன்பு இதுவரை தோன்றவில்லை. விமானப்படை தாக்குதலில் அவர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் மொஜ்தபா கமேனியின் அறிக்கை ஈரானிய டிவிக்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அதில் அவர் கூறியுள்ளதாவது: வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க தளங்களை விரைவில் மூட வேண்டும். இல்லையென்றால் அவற்றின் மீது தாக்குதல் நடத்துவோம். இந்த போரில் கொல்லப்பட்டவர்களுக்காக பழிவாங்குவோம். ஈரான் மீது சுமத்திய போருக்கு இழப்பீடு பெறுவோம். எதிரிகள் தர மறுத்தால், அதற்கு பொருத்தமானதாக கருதும் அளவுக்கு அவர்களின் சொத்துகளை நாங்கள் பறிமுதல் செய்வோம். அது முடியாவிட்டால், அவர்களின் சொத்தில் சமமான அளவு அழிப்போம்.

பழிவாங்குவது குறிப்பிட்டளவு வடிவம் பெற்றுள்ளது. ஆனால், அது முழுமை அடையும் வரை அதற்கு முன்னுரிமை அளிப்போம். ஈரான் ஒரு போதும் பின்வாங்காது. முழு பலத்துடன் எதிர்க்கும். மறைந்த கமேனிக்கு மட்டும் அல்லாமல், இந்த போரில் உயிரிழந்த ஒவ்வொருவருக்காகவும் பழிவாங்குவோம். எனது தந்தையின் மரணம், அவர் எப்போதும் உண்மையை பேசுபவர் என்பதை உறுதி செய்கிறது என்பதையும், சிறந்த குணாதிசயங்களை கொண்டிருந்தார் என்பதையும் காட்டியது. எனது தந்தையின் பாதையில் தொடர்ந்து பயணிப்பேன். தியாகிகள் சிந்திய ரத்தத்துக்கு பழிவாங்குவதை மறக்க மாட்டோம். ஹார்முஸ் ஜலசந்தியை இப்போதைக்கு மூடியே வைக்கவேண்டும். அதுவே நம் துருப்பு சீட்டு. அண்டை நாடுகளுடனான நட்பில் நம்பிக்கை கொண்டுள்ளோம். ஆனால், அங்குள்ள அமெரிக்க தளங்களை இலக்காகக் கொண்டு தாக்குவோம். இது தவிர்க்க முடியாதது.இவ்வாறு கமேனி கூறியுள்ளார்.

Source link