மெஸ்ஸி, ரொனால்டோ போல பும்ரா: இங்கிலாந்து முன்னாள் கேப்டன் பாராட்டு

ஆமதாபாத்: ”மெஸ்ஸி அல்லது ரொனால்டோ போல சிறந்த வீரராக பும்ரா திகழ்கிறார்,”என இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் பாராட்டினார்.

குஜராத்தின் ஆமதாபாத்தை சேர்ந்தவர் பும்ரா, 32. இவருக்கு ஐந்து வயதான போது, தந்தை ஜஸ்பிர் சிங் காலமானார். பள்ளி ஆசிரியரான தாயார் தல்ஜீத் தான், வளர்த்து ஆளாக்கினார். கிரிக்கெட்டில் தடம் பதிக்க உதவினார். இவரது பந்துவீசும் முறை குறித்து ஆரம்பத்தில் குஜராத் கிரிக்கெட் சங்க தேர்வாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதிலிருந்து விரைவில் மீண்டார். இவரது திறமையை மும்பை அணி பயிற்சியாளராக இருந்த ஜான் ரைட் கண்டறிந்தார். 2013ல் மும்பை அணிக்கு ஒப்பந்தம் செய்தார். இதற்கு பின் இந்திய அணியின் ‘வேகப்புயலாக’ உருவெடுத்தார்.

சமீபத்திய ‘டி-20’ உலக கோப்பை தொடரில் மிரட்டினார். 8 போட்டியில் 14 விக்கெட் (எகானமி 6.21) வீழ்த்தினார். ஆமதாபாத், மோடி மைதானத்தில் நடந்த பைனலில் (எதிர், நியூசி.,) 4 ஓவரில் 15 ரன் மட்டும் கொடுத்து, 4 விக்கெட் கைப்பற்றினார். ஆட்டநாயகன் விருது வென்ற இவர், இந்திய அணி மூன்றாவது முறையாக உலக கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

வெற்றி நாயகன்: இது பற்றி மைக்கேல் வான் கூறுகையில்,”சர்வதேச கால்பந்து நட்சத்திரங்களான மெஸ்ஸி (அர்ஜென்டினா) அல்லது கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்) போன்று சிறந்த வீரர் பும்ரா. இவர் இடம் பெறும் அணி நிச்சயம் வெற்றி பெறும். ஒருவேளை இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்தால், இங்கிலாந்து உலக கோப்பை வென்றிருக்கும். 1985ல் இருந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்துகிறேன். எனது நீண்ட அனுபவத்தில் பும்ரா தான் சிறந்த பவுலர். டெஸ்ட் போட்டிகளிலும் அசத்துகிறார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா மண்ணிலும் சாதித்துள்ளார்,”என்றார்.

கடவுளுக்கு நன்றி

பும்ரா கூறுகையில்,”சவால்களை பார்த்து ஓடி ஒளிய மாட்டேன். கடினமான பணியை செய்ய விரும்புவேன். இதற்காக தான் கிரிக்கெட் விளையாட துவங்கினேன். நெருக்கடியான தருணத்தில், போட்டியில் திருப்பம் ஏற்படுத்தும் போது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும். ஆமதாபாத்தில் இருந்து தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையை துவக்கினேன். இங்கு உலக கோப்பை வென்றது, பைனலில் ஆட்ட நாயகன் விருது பெற்றது சிறப்பான தருணம். எனது தாயார், மகன், குடும்பத்தினர் முன் சாதித்தது தனிப்பட்ட முறையில் உற்சாகம் அளித்தது. தொடர்ந்து இரு முறை உலக கோப்பை வென்றது பெரிய விஷயம். இதற்காக கடவுளுக்கு நன்றி,”என்றார்.

Source link