சென்னை: ”சட்டம் – ஒழுங்கு பிரச்னைக்கு, போதைப் பொருட்கள் முக்கியமான காரணமா, இல்லையா என்பதை விவாதிக்க வேண்டாம்,” என, தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார் தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்து, உள்துறை செயலர் தீரஜ் குமார், பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமன், சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி .பி., மகேஷ்வர் தயாள், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர், நேற்று தலைமைச் செயலகத்தில், பேட்டி அளித்தனர். அப்போது, அவர்கள் கூறியதாவது:
தீரஜ்குமார்:
தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் குற்றங்கள் எண்ணிக்கை சரிந்துள்ளது. கடந்த 2021ல், 1,597 கொலைகள் நடந்தன. ஆனால், 2024ல், 1,490 ஆகவும், 2025ல், 1,461 ஆகவும் குறைந்துள்ளன.
பாலியல் வன்கொடுமையை பொறுத்தவரை, 2021ல், 422 ஆக இருந்தது. கடந்த ஆண்டு 401 ஆக குறைந்துள்ளது. ஆனால், கடந்த சில மாதங்களாக, சட்டம் ஒழுங்கு குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. காவல் மரணத்தில், அரசின் நடவடிக்கை எப்படி இருக்கிறது என, பார்க்கவேண்டும்.
அதை அரசு சகித்துக் கொள்வதில்லை. அதனால்தான், சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில், உடனடி விசாரணை நடத்தப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சட்டம் – – ஒழுங்கு பிரச்னைக்கு, போதைப் பொருட்கள் முக்கியமான காரணமா, இல்லையா என்பதை விவாதிக்க வேண்டாம்.
டி.ஜி.பி.,க்கு உண்டான எல்லா அதிகாரமும், பொறுப்பு டி.ஜி.பி.,க்கும் உள்ளது. இது தான் சட்டம் – ஒழுங்கு பிரச்னைக்கு காரணம் என, யாரோ கட்டமைக்க முயலுகின்றனர். அது தவறானது.
வெங்கடராமன்:
போக்சோ வழக்கை பொறுத்தவரை, அரசின் விழிப்புணர்வால், பாதிக்கப்படும் குழந்தைகள் புகார் கொடுக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன், இப்படி நடக்கவில்லை. ஜாதி பெயரை சொன்னாலே, எஸ்.சி., – எஸ்.டி., சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. துாத்துக்குடியில், மாணவி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளி, வெளியில் இருந்து வர வாய்ப்பு இல்லை.
விசாரணை நடப்பதால் விரிவாக பேச முடியாது. தென் மாவட்டங்களில், ஜாதிய மோதல், கொலைகள், சமூக வலைதளத்தில், ஜாதி பின்னணியில் வீடியோ வெளியிடும் நபர்களை கண்காணிக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
