சபையை விட எதிர்க்கட்சி தலைவர் மேலானவர் அல்ல: ராகுல் மீது லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பாய்ச்சல்

– நமது டில்லி நிருபர் -:

லோக்சபாவில், தனக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான ஓட்டெடுப்பு தோல்வி அடைந்த நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா, சபையை நேற்று வழிநடத்தினார்.

அப்போது, “எதிர்க்கட்சித் தலைவர் இந்த சபையைவிட மேலானவர் அல்ல; அவர் எதை வேண்டுமானாலும் பேசலாம் என சிலர் நினைக்கின்றனர். அப்படி, எந்த சலுகையும் இங்கு கிடையாது,” என, கடுமையாக விமர்சித்தார்.

பாரபட்சமாக செயல்படுவதாக கூறி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சியினர் தாக்கல் செய்தனர்.

இதற்கிடையே, பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு சமீபத்தில் துவங்கியதும், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான ஓட்டெடுப்பு லோக்சபாவில் நேற்று முன்தினம் நடந்தது.

நோட்டீஸ்

எதிர்க்கட்சியினரின் கடும் அமளிக்கு இடையே பல மணி நேர விவாதத்திற்கு பின், குரல் ஓட்டெடுப்பு மூலம் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

இதையடுத்து, லோக்சபா நேற்று வழக்கம்போல் கூடியதும், சபாநாயகர் ஓம் பிர்லா சபையை வழிநடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:

எதிர்க்கட்சித் தலைவர் இந்த சபையைவிட மேலானவர் என்றும், அவர் எதை வேண்டுமானாலும் பேசலாம் என சிலர் நினைக்கின்றனர். அப்படி எந்த சலுகையும் இங்கு கிடையாது.

சபை அதற்கென வகுக்கப்பட்ட விதிகளின்படியே இயங்குகிறது. பிரதமரோ அல்லது மத்திய அமை ச்சரோ கூட சபையில் உரையாற்றும் முன், சபை விதிகளின் கீழ் நோட்டீஸ் அளிக்க வேண்டும்.

சபையில், ‘மைக்ரோபோன்’களை நான் கட்டுப்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; சபாநாயகர் இருக்கையில், ‘மைக்ரோபோன்’களை இயக்கவும், நிறுத்துவதற்குமான சுவிட்ச்சுகள் இல்லை.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபைத் தலைவராகச் செயல்படும்போது, அவர்களும் இந்த உண்மையை முழுதும் அறிவர். பேச அனுமதிக்கப்பட்ட உறுப்பினருக்கு மட்டுமே மைக்ரோபோன் இயக்கப்படும். அந்த உறுப்பினரின் மைக்ரோபோன் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.

உறுதி

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மூன்றாவது முறையாக, லோக்சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதம் நடந்தது.

சபையில் உள்ள ஒவ்வொரு எம்.பி.,யும் விதிகள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டு பிரச்னைகள் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதை உறுதிசெய்ய, நான் எப்போதும் பாடுபட்டு வருகிறேன். என் நடவடிக்கைகள் அனைத்தும் பாரபட்ச மற்றவை.

லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்.பி.,க்களை சஸ்பெண்ட் செய்தது வேதனை அளித்தது. எனினும், சபை விதிகள் மீறப்படும்போது இத்தகைய நடவடிக்கைகள் அவசியமாகின்றன.

இதன் மூலம் சபையின் ஒழுக்கம் பேணப்படும். இது, என் கடமையின் ஒரு பகுதி. லோக்சபாவில், அரசியலமைப்பின் கண்ணியத்தை நிலைநிறுத்துவதில் நான் உறுதியாக உள்ளேன்.

எதிர்க்கட்சி பெண் எம்.பி.,க்களின் போராட்டத்தின் போது, இத்தகைய செயல்பாட்டையே பின்பற்றினேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link