மூணாறு: ”மின்வெட்டு இல்லாத கேரளா என்ற கனவு நனவாகியுள்ளது. 2040க்குள் மின் உற்பத்தியில் மாநிலம் தன்னிறைவு பெறுவதே இலக்கு” என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசினார்.
மூணாறு அருகே பள்ளிவாசல் நீர்மின் நிலைய விரிவாக்க திட்டம் துவக்க விழா, இடுக்கி நீர்மின் திட்ட பொன் விழா கொண்டாட்டம், பள்ளிவாசல் நீர்மின் நிலைய வளாகத்தில் நடந்தது.
இதில் முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொண்டார். மின்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி, எம்.எல்.ஏ.,க்கள் மணி, ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பினராயி விஜயன் பேசியதாவது: மின்வெட்டு இல்லாத கேரளா என்ற கனவு நனவாகியுள்ளது. முன்னர் நான்கரை மணி நேரம் மின்வெட்டு இருந்தது. மின்வாரியத்தினர் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டதால் அந்த நிலை மாறியுள்ளது. திட்டங்கள் குறிப்பிட்ட கால அளவைவிட முன்பாகவே முடிக்கப்பட்டன. நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுக்கும், கார்ப்பரேட்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. நாட்டின் மீது முழு அர்ப்பணிப்பு இருந்தால் வறுமை இல்லாத நாடாக மாற்றலாம். மின்சாரம் கொண்டு செல்வதில் இடமண் – கொச்சி மின் வழித்தடம் முக்கியமானது. இந்த வழித்தடம் தடைபட்டதுடன், அதை செயல்படுத்திய பவர் கிரிட் நிறுவனம் மாநிலத்தில் இருந்து வெளியேறியது.
அந்நிறுவனத்தை 2016ல் அரசு மீண்டும் வரவழைத்து திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 800 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இடுக்கி பொன்விழா திட்டம், மூணாறு அருகே 240 மெகாவாட் லெட்சுமி நீர் மின் திட்டம், 450 மெகாவாட் சபரிகிரி மறுசீரமைப்பு திட்டங்களின் பணிகள் நடந்து வருகின்றன. 2040க்குள் மின் உற்பத்தியில் கேரளா தன்னிறைவு பெறுவதே இலக்கு என்றார்.
