கிருஷ்ணகிரி:போர் பதற்றத்தால் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளிலும், துறைமுகங்களிலும் தேக்கமடைந்துள்ளதாக மாம்பழக்கூழ் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
![]() |
இதுகுறித்து சங்கத்தின் பொது செயலர் மாதவன் கூறியதாவது:
தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 23 மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளுக்கு 8 லட்சம் டன் மாம்பழங்கள் வருகின்றன.
இந்த மாம்பழங்கள் அரைக்கப்பட்டு 4 லட்சம் டன் மாம்பழக்கூழ் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 60 சதவீதம் உள்நாட்டில் விற்பனை மற்றும், 40 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தாண்டு 4 லட்சம் டன் மாம்பழக்கூழ் உற்பத்தி செய்ததில் 2 லட்சம் டன் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது. அரபு மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் முக்கிய சந்தையாக உள்ள நிலையில், ரம்ஜான் மாதங்களில் விற்பனை அதிகரிப்பது வழக்கம்.
ஆனால், மேற்காசிய போரால் ஏற்றுமதி செய்யப்பட்ட மாம்பழக்கூழ் துறைமுகங்களில் தேக்கமடைந்துள்ளது. இதன் மதிப்பு 2,000 கோடி ரூபாய். குளிர்பான, பழச்சாறு தயாரிப்பு நிறுவனங்களும் ஸ்டாக் இருப்பதால் மாம்பழக்கூழை வாங்க முன் வரவில்லை. மாம்பழக்கூழ் ஏற்றுமதிக்கான கப்பல் வாடகை அதிகரித்து விட்டது. ஜி.எஸ்.டி வரி 5 சதவீதம் விதிக்கப்படுகிறது. நிலைமை சீராகும் வரை வரியை நீக்க வேண்டும்.
கலப்பட மாம்பழச்சாறு தயாரிப்பை கண்டறிந்து தடுத்து நிறுத்த வேண்டும். தேங்கி கிடக்கும் மாம்பழக்கூழை அரசே கொள்முதல் செய்து மதிய உணவு திட்டத்தில் வழங்க வேண்டும். ஒரு வருடத்தில் 3 மாதங்கள்தான் ஆலைகள் இயங்குகின்றன.
ஆனால், 12 மாதங்களுக்கும் சேர்த்து டிமாண்டு சார்ஜ் என்று மின்சார கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை குறைக்க வேண்டும். தவறினால், மாம்பழக்கூழ் விற்பனையானால்தான் விவசாயிகளிடமிருந்து வாங்கும் மாம்பழங்களுக்கு பணம் வழங்க முடியாத நிலை ஏற்படும்.
இவ்வாறு தெரிவித்தார்.

