திருவண்ணாமலை: 'ஹிந்துக்களின் கோரிக்கைகளை ஏற்று கொள்பவர்களுக்கு தான் ஓட்டு' என, திருவண்ணாமலையில் நடந்த

திருவண்ணாமலை: ‘ஹிந்துக்களின் கோரிக்கைகளை ஏற்று கொள்பவர்களுக்கு தான் ஓட்டு’ என, திருவண்ணாமலையில் நடந்த ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

திருவண்ணாமலை கிரிவலப்பாதை, சந்தைமேடு பகுதியில், விஸ்வ ஹிந்து பரிஷத், பூஜாரிகள் பேரமைப்பு இணைந்து, ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டை நடத்தின. இதில், பூஜாரிகள் பேரமைப்பு மாநில தலைவர் ராஜா, அகில பாரத சன்யாசிகள் சங்க நிறுவனர் ராமானந்த சுவாமிகள், விஸ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத அமைப்பு இணை பொதுச்செயலர் ஸ்தாணுமாலயன், மன்னார்குடி ராமானுஜ ஜீயர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


மாநாட்டில், ராமானுஜ ஜீயர் பேசியதாவது: மாநாட்டின் நோக்கம், எந்த கோவிலும் பூஜை இல்லாமல் இருக்கக்கூடாது என்பது தான். ஜாதி இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் எனக்கூறி, அரசியல்வாதிகள், நம்மை ஜாதிவாரியாக பிரிக்கின்றனர்.

அறநிலையத்துறை, கோவில்களை காப்பாற்ற வேண்டுமே தவிர, கோவில்களை அழிக்க கூடாது. திருப்பரங்குன்றத்தை பார்த்தோம்; கோவிலுக்கு தீர்ப்பு சாதகமாக வந்தது. அதை நிறைவேற்ற வேண்டும் என்ற பொறுப்பு அறநிலையத்துறைக்கு உள்ளது. ஆனால், ஹிந்துக்கள் கொடுத்த பணத்தை வைத்துக்கொண்டு, உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது.

சனாதன தர்மத்தை, டெங்கு, மலேரியா கொசு மாதிரி அழிக்க வேண்டும் என, ஒருவர் கூறினார். டெங்கு, மலேரியா, கொசு நன்றாக வளர்ந்து எல்லாரையும் கடித்து கொண்டிருக்கிறது. அது மாதிரி, நாமும் டெங்கு, மலேரியா கொசுவை ஒழித்து கட்ட வேண்டும். அதாவது, டி- டெங்கு, எம்- மலேரியா, கே- கொசு, டி.எம்.கே.,வை ஹிந்துக்கள் ஒன்று சேர்ந்து ஒழித்து கட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Image 1548186

ஸ்தாணுமாலயன் பேசியதாவது: கோவில்களை ஹிந்துக்கள் நிர்வகிக்க அனைத்து தகுதியும் உள்ளது. எனவே, அரசாங்கம் கோவில்களை விட்டு வெளியேற வேண்டும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என கூறிக்கொண்டு, ஹிந்துக்களை, 2ம் கட்ட மக்களாக நடத்தி கொண்டிருக்கின்றனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மலை மீது தீபம் ஏற்ற பக்தர்கள் செல்ல சில ஆண்டுகளுக்கு முன் தடை விதித்தது. அதை எதிர்த்து நாம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழிபட அனுமதி பெற்றோம்.

மதம் மாறி போனவர்களுக்கு இந்த அரசு, இட ஒதுக்கீடு மற்றும் சலுகை வழங்கி வருகிறது. தமிழகத்தில் 46,000 கோவில்கள் உள்ளன. அதை நிர்வகித்தால், ஹிந்துக்களுக்கு எந்தவித பிரச்னையும் ஏற்படாது.

அக்னி ஸ்தலத்தில் உறுதி எடுத்திருக்கிறோம். அரக்க சக்திகளை ஒழிக்க, சிவன் மூன்றாவது கண்ணை திறக்க வேண்டும். தமிழகத்தில் ஞானிகள், சித்தர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், யோகிகள் வாழ்ந்த பூமியை காக்க, சக்தி கொடுக்க வேண்டும். நாங்கள் வேலை செய்ய தயாராக இருக்கிறோம் என்ற உறுதி மொழியை எடுத்துக் கொள்வோம்.

எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்பவர்களுக்கு தான், இந்த தேர்தலில், 234 தொகுதிகளிலும் ஓட்டு போடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

குன்றத்தில் தீபம் ஏற்றணும்

அனைத்து கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். கோவில்களுக்கு பட்டா வழங்க வேண்டும். பூசாரிகளுக்கு அனைத்து கோவில்களிலும் சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். ஹிந்துக்களுக்கு விரோதமாக செயல்படும், தி.மு.க.,விற்கு ஓட்டு போடக்கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Source link