ஆரோக்கியமாக வாழ்வதற்கு துாக்கம் அவசியம். துாக்கம் என்பது உடல் மற்றும் மூளையின் ஓய்வு நிலை. நமது மூளையில் உள்ள ‘பீனியல் கிளான்ட்’ பகுதியில் சுரக்கும் ‘மெலடோனின்’ ஹார்மோன், நாம் துாங்குவதற்கான வேலையை செய்கிறது.
மார்ச் 2வது வெள்ளியில் உலக துாக்க தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அன்றாட வாழ்வில் அலைபேசியின் பயன்பாடு பெருமளவு அதிகரித்துள்ளது. லேப்டாப், டேப்லெட் பயன்படுத்துவதால் அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் ‘பீனியல் கிளான்டை’ பாதிக்கிறது. இதனால் ‘மெலடோனின்’ ஹார்மோன் சுரப்பு குறைந்து துாக்கம் தடைபடுகிறது. உடலுக்கு போதுமான, சரியான துாக்கம் இல்லாவிட்டால், துாக்கத்தின் போது உடலில் ஏற்படும் மெட்டபாலிசம் செயல்பாடு பாதித்து கொழுப்புச்சத்து அதிகரித்து உடல் எடை அதிகரிக்கிறது.
உலகளாவிய ஆய்வுப்படி 16 சதவீதம் பெரியவர்களுக்கு துாக்கமின்மை உள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இந்த அளவானது வயது, வேலை, நாடு மற்றும் பல்வகைகளில் மாறுபட்டு உள்ளது. வெளிநாட்டினருடன் ஒப்பிடும்போது இந்தியப் பெண்களின் துாக்கம் 30 முதல் 60 நிமிடங்கள் குறைவாக உள்ளது. பெண்களும் துாக்கத்தின் அவசியம் உணர்ந்து போதுமான நேரம் நன்றாக உறங்கி ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும்.
துாக்கம் குறைந்தால் உறங்கும் நேரம், அப்போதைய மனநிலை, காலஅளவைப் பொறுத்து ஏற்படும் முரண்பாடுகளால் துாக்கமின்மை வரும். மூச்சுக்குழாய் சுவாசம் தடைபட்டு மூச்சுத்திணலால் மூச்சு நின்று போகும் நிலை (ஸ்லீப் அப்னியா) ஏற்படும். துாக்கத்தின் போது மூச்சு மையத்தின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தப்படுவால் மூச்சு நின்று போகும் நிலை (சென்ட்ரல் ஸ்லீப் அப்னியா) உருவாகும். கால்களில் தளர்ச்சி, சோர்வு, வலியுடன் பகலில் அதிக சோர்வாக, துாக்கம் வரும் உணர்வு அதிகமாக இருக்கும். உதாரணமாக நார்கோலெப்சி எனப்படும் திடீர் திடீரென தூக்கம் வரும் நிலை உருவாகும்.
குறட்டை விடுவது ஆழ்ந்த உறக்கம் அல்ல. துாக்கத்தின் போது மூக்கு, கழுத்து அல்லது தொண்டைப் பகுதியில் தடை ஏற்படுவதால் காற்றுப் பாதை குறுகுகிறது. மூச்சுக்குழாயில் உள்ள திசுக்கள் அதிர்வடைவதால் குறட்டை ஒலி உண்டாகிறது.
ஓ.எஸ்.ஏ., உள்ளதா குறட்டையை கண்டுகொள்ளாமல் விட்டால் ‘ஸ்லீப் அப்னியா’ வரும். இது ஏற்படும்போது இதயத்துடிப்பு அதிகரித்து மூச்சுத்திணறல் உண்டாகி சிலநேரங்களில் மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. காலையில் எழுந்தவுடன் தலைவலி, தொண்டை வறட்சி, தாகம் அதிகமாக இருக்கும். நாள் முழுவதும் சோர்வாக இருக்கும். வேலையில் கவனச்சிதறல் ஏற்பட்டு ஈடுபாடு இல்லாத நிலை ஏற்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் ‘அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா’ (ஓ.எஸ்.ஏ.) இருப்பதை உறுதிசெய்து மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
உடல் எடை கூடும் சரியான துாக்கம் இல்லாவிட்டாலும் உடல் எடை கூடும். உடல் எடை அதிகரிப்பதால் ரத்தஅழுத்தம், சுவாச பிரச்னைகள், இதயநோய், படபடப்பு, கல்லீரல் குறைபாடு, மனஅழுத்தம் ஏற்படும். இரவில் நீண்டநேரம் விழித்திருப்பதால் அறிவு வளர்ச்சி குறைபாடு, நினைவுத் திறன் இழப்பு ஏற்படும்.
படிப்பு, வேலை, குடும்பப் பிரச்னை களால் உண்டாகும் மன அழுத்தம், மன இறுக்கம், அதீத கவலை, பயத்தாலும் ஓ.எஸ்.ஏ., பிரச்னை வரலாம். சிலவகையான மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள், ஷிப்ட் வேலையால் ஏற்படும் துாக்க சுழற்சி முரண்பாடுகள், தைராய்டு, ஆஸ்துமா பிரச்னைகள், இதயநோய் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு ஓ.எஸ்.ஏ., பாதிப்பு அதிகளவில் ஏற்படும். வயது மூப்பின் காரணமாக உடல் அசவுகரியங்கள் ஏற்படும்.
துாக்கத்திற்கான வழிகள் படுக்கை அறையை துாங்குவதற்கான இடமாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். துாங்கும், விழிக்கும் நேரத்தை முறைபடுத்திக் கொள்ள வேண்டும். துாங்குவதற்கு முன் காபி, டீ தவிர்க்கலாம். துாங்குவதற்கு 4 மணி நேரத்திற்கு முன் கம்ப்யூட்டர், அலைபேசி, லேப்டாப், ‘டிவி’ பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
தினமும் உடற்பயிற்சி, நடைபயிற்சி, மனஅழுத்தத்தை குறைக்கும் தியானம், சுவாசப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சீரான உறக்கத்தினால் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்சிஜன் கிடைத்து ஆரோக்கியமான உடலைப் பெறலாம்.
– டாக்டர் மா. பழனியப்பன்
நுரையீரல் சிறப்பு நிபுணர், மதுரை
அலைபேசி 94425 24147
