– நமது நிருபர் –
கோவை மாவட்ட மக்களுக்கு தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் பரிசு பொருட்களை வாரி வழங்கத்துவங்கியுள்ளன. இப்போது தி.மு.க., சார்பில் பூத் வாரியாக வீட்டுக்கு ஒன்று வீதம் சில்வர் அண்டா வழங்கப்படுகிறது. அடுத்து இனி என்னென்ன வருமோ என்ற எதிர்பார்ப்பினை வாக்காளர்கள் மத்தியில் இரு கட்சிகளும் ஏற்படுத்தியுள்ளன.
கோவை மாவட்ட வாக்காளர்களை கவர்வதற்காக தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் போட்டி போட்டுக் கொண்டு பரிசு பொருட்களை வழங்குகின்றன. தைப்பொங்கல் சமயத்தில் தி.மு.க., சார்பில் ஒவ்வொரு ஏரியாவிலும் விளையாட்டு போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு சில்வர் அண்டா, ஹாட் பாக்ஸ், வாட்டர் பாட்டில், டிபன் பாக்ஸ், சம்படம், சில்வர் டப்பா, தட்டு, குடம், பிளாஸ்டிக் வாளி, பிளாஸ்டிக் டிரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டன.
இதையடுத்து, சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிட்டதும் அ.தி.மு.க.,வும் களமிறங்கியது. அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., – ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோரின் பிறந்த நாள் நலத்திட்ட உதவி என்கிற பெயரில், 10 தொகுதிகளிலும் பரிசுப் பொருட்கள் அடங்கிய ஒரு பை வழங்கப்பட்டது. அதில், ஹாட்பாக்ஸ், சில்வர் தட்டு, வாட்டர் பாட்டில் இருந்தன.
முன்னாள் அமைச்சர் வேலுமணி போட்டியிடும் தொண்டாமுத்துார் தொகுதியில் மட்டும் சிறப்பு ஏற்பாடாக ஹாட்பாக்ஸ், சில்வர் தட்டு, வேட்டி, சட்டை பிட், சேலை, வாட்டர் பாட்டில், ஒரு குடை ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டன. தி.மு.க., நிர்வாகிகளை தவிர்த்து மற்றவர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டது. இத்தகவல் தி.மு.க., மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
தி.மு.க.,வினர் வாக்காளர் பட்டியல் அடிப்படையில், பூத் வாரியாக ஏற்கனவே தயாரித்திருந்த மஞ்சள் புத்தகத்தில், ஒவ்வொரு வாக்காளரும் எந்த கட்சியை சார்ந்தவர் என உத்தேசமாக கணக்கெடுக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, அ.தி.மு.க., – பா.ஜ.,வினரை தவிர்த்து, மற்ற வாக்காளர்கள் வீடுகளுக்கு தி.மு.க., சார்பில் டோக்கன் வழங்கப்பட்டது. பலரும் ஆர்வத்துடன் வாங்கினர்; சிலர் தயக்கத்துடன் வேண்டாமென தவிர்த்தனர்.
முதல்கட்டமாக, முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, கோலப்போட்டி நடத்தி, ஹாட் பாக்ஸ் வழங்கப்பட்டது. இப்போது வீடு வீடாக சில்வர் அண்டா வழங்கப்படுகிறது. இன்னும் 2 பரிசு பொருள் வரும் என்கின்றனர் தி.மு.க.,வினர்.
தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: ஒரு பூத்தில் 80 சதவீத வாக்காளர்களை கவரும் வகையில், குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளன. பூத்துக்கு ஏற்ப வாக்காளர்கள் எண்ணிக்கை மாறுபடுகிறது. குறைந்த பட்சம் 100 குடும்பத்தில் இருந்து அதிகபட்சம் 400 குடும்பங்களுக்கு பரிசு பொருள் வழங்கப்படுகிறது. முதலில் ஹாட் பாக்ஸ் வழங்கினோம்; இப்போது அண்டா வழங்க ஆரம்பித்து உள்ளோம். அடுத்த கட்டமாக, ஒரு கிப்ட் பை வரும் என கூறியுள்ளனர். அதில், என்னென்ன பொருட்கள் இருக்குமென தெரியாது. 3 கிராம் வெள்ளி நாணயம், 35 இஞ்ச் ‘டிவி’, எலக்ட்ரிக் ஸ்டவ், பால் குக்குர் என பலவிதமான பரிசு பொருட்கள் வரலாம் என்கின்றனர்.
தி.மு.க., ‘வீக்’காக உள்ள பகுதியில் மட்டும் பெரிய பரிசு வழங்கப்படும். 2 கன்டெய்னர்கள் கோவையை நோக்கி வருகின்றன. தி.மு.க., ஆதரவு குடும்பத்தினருக்கு டோக்கன் வழங்கி விட்டோம். வேண்டாமென கூறிய சிலர், இப்போது கேட்கிறார்கள். ஏற்கனவே கொடுத்த லிஸ்ட் எண்ணிக்கையிலேயே பொருட்கள் ஒதுக்குவதால், என்ன செய்வதென தெரியவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
