புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யருக்கும், காங்கிரஸ் எம்பி சசி தரூருக்கு இடையே பொதுவெளியில் கருத்து மோதல் வெடித்துள்ளது.
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நடந்து வரும் மோதல் குறித்த தொலைக்காட்சி விவாதத்தில் காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறிய கருத்துக்களை விமர்சனம் செய்து, மணி சங்கர் அய்யர் எழுத கடிதம் வாயிலாக மோதல் தொடங்கியது. இருவரும் வெளியுறவுக்கொள்கை, சித்தாந்தம் குறித்து தனிப்பட்ட கருத்துகளை கடிதங்கள் வாயிலாக தெரிவித்து இருக்கின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நான் உங்களுக்கு ஓட்டளித்தேன். தோல்வி அடைந்த போதிலும், கார்கேவிடம் சசி தரூருக்கு ஒரு கவுரவமான இடத்தை வழங்க வேண்டும் என வாதிட்டேன். உங்களுடைய ஜனநாயக உரிமையை மதிக்க வேண்டும் என்றும் வாதிட்டேன்.
உங்களுடைய திறமையை காங்கிரஸ் கட்சி தலைமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினேன். அதன் தொடர் விளைவாக, அப்போது முதல் சோனியா குடும்பத்தினரும், கார்கேவும் என்னை சந்திக்க மறுக்கின்றனர்.
தற்போது அந்த ஆதரவிற்காக வருந்துகிறேன். அமெரிக்காவை விமர்சிப்பதில் அதிக எச்சரிக்கையுடன் இருக்கிறார் என்று ஜெய்சங்கர் பற்றி கூறுவதில் உடன்பாடில்லை. பார்லிமென்ட் நிலைக்குழுவின் தலைவராக இருக்கும் சசி தரூர் வெளியுறவுக் கொள்கை குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருப்பது, அவர் வகிக்கும் பதவியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற விவகாரத்தில், சசி தரூரின் நிலைப்பாடு, அவரது சித்தாந்தம் குறித்து சந்தேகங்களை எழுப்பியது. இவ்வாறு மணி சங்கர் அய்யர் கூறியுள்ளார்.
சசி தரூர் பதிலடி
காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யருக்கு பதில் அளித்து சசி தரூர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வலிமையான ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை. சர்வதேச விவகாரங்கள் குறித்த எனது கருத்துக்கள் இந்தியாவின் நலனை கருத்தில் கொண்டு தெளிவான தேசியவாதக் கண்ணோட்டத்தில் உள்ளன.
இந்திய பொருளாதாரம், ராஜதந்திர நிலைப்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு செயல்படுவதை, தார்மீக ரீதியாக சரண் அடைந்து விட்டதாக கருதக்கூடாது. அது, பொறுப்பான அரசு நிர்வாகம் ஆகும். ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை வெளிநாடுகளுக்கு விளக்குவதற்கு, அனைத்துக் கட்சிக் குழுவில் பங்கேற்றது, அனைத்தும் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டது.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை ஆதரித்தேன். காங்கிரஸ் தலைவர் தேர்தலின் போது கடந்த காலங்களில் மணி சங்கர் அய்யரை ஆதரித்தேன். கட்சிக்குள் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொண்டபோதும் கூட, அவரை ஆதரித்தேன். நீங்கள் பதவியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட போது, அந்த நிலைமை தலைகீழாக மாறியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இவ்வாறு சசி தரூர் கூறியுள்ளார்.
