கவியருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை- வனத்துறை அறிவிப்பு

பொள்ளாச்சி:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் ஆழியார் அடுத்து கவியருவி (குரங்கு நீர்வீழ்ச்சி) உள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றாக இது விளங்குகிறது.

இங்கு வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். கோவை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின்பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள்.

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கவியருவியில் தங்கள் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம். குறிப்பாக வால்பாறைக்கு சுற்றுலா செல்லக்கூடியவர்கள் கீழே உள்ள ஆழியார் அணை, கவியருவியில் குளித்து விட்டே மலைப்பகுதியான வால்பாறைக்கு செல்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் வறட்சி நிலவுகிறது.

கவியருவிக்கும் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. தண்ணீர் குறைந்தாலும் சுற்றுலா பயணிகள் காத்திருந்து குளித்து சென்றனர்.

இந்த நிலையில் தண்ணீர் வரத்து குறைவு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று முதல் ஆழியார் கவியருவி தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

தற்போது கவியருவியில் தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்து பாறை மட்டுமே தெரிகிறது. இதனால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அருவியில் உடைந்து காணப்படும் தடுப்பு கம்பிகள், மரக்கட்டைகளை அகற்றி விட்டு, புதிதாக கம்பி அமைக்கப்படும். மீண்டும் மழை பெய்து நீர்வரத்து தொடங்கியவுடன் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Source link