திருவள்ளூர் மாவட்டத்தில் முருகனின் அறுபடை வீடு அமைந்துள்ள திருத்தணி தொகுதியில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகளவில் உள்ளனர். தொகுதியில் வன்னியர் சமூகத்தினரும் முதலியார் சமூகத்தினரும் மெஜாரிட்டியாக இருக்கிறார்கள். விவசாயமும், நெசவும் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்தத் தொகுதியில் 1951 முதல் 2016 வரை நடந்த 14 தேர்தல்களில், 6 தடவை அதிமுக-வும், 3 தடவை திமுக-வும், 2 தடவை காங்கிரஸும், ஒரு தடவை பாமக, தேமுதிக, சுயேச்சையாக ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். 2021-ல் நடந்த தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட தி.மு.க-வின் மேற்கு மாவட்டச் செயலாளர் சந்திரன் எம்.எல்.ஏ-வானார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் ஹரி வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இந்தத் தடவை சிட்டிங் எம்.எல்.ஏவும் தி.மு.க மேற்கு மாவட்டச் செயலாளருமான சந்திரன், சீட் கேட்டு அறிவாலயத்தில் விருப்ப மனு கொடுத்திருக்கிறார். இவரைத் தொடர்ந்து தலைமை செயற்குழு உறுப்பினர் பூபதி உட்பட சிலர் சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள் . அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை முன்னாள் எம்.எல்.ஏ கோ.ஹரி, ஒன்றியச் செயலாளர் இ.என்.கண்டிகை ரவி ஆகியோர் சீட்டை எதிர்பார்க்கிறார்கள். இவர்களைத் தவிர இந்தத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வும் சசிகலாவின் தீவிர ஆதரவாளரான பள்ளிப்பட்டு நரசிம்மனும் இந்தத் தேர்தல் களமிறங்க இருக்கிறார். இந்த நிலையில்தான் சசிகலா, சில தினங்களுக்கு முன்பு கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தியவர், இன்று அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்று கட்சியின் பெயரை அறிவித்திருக்கிறார். அதனால் சசிகலாவின் ஆதரவாளரான நரசிம்மன் தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டி வருகிறார்.
தி.மு.க-வில் நிலவும் கோஷ்டிப் பூசல் தொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சிலர்,
“திருத்தணி தொகுதி தி.மு.க-வைப் பொறுத்தவரை இரண்டு கோஷ்டிகளாக நிர்வாகிகள் செயல்பட்டு வருகிறார்கள். இந்த கோஷ்டிப் பூசல் பஞ்சாயத்து தேர்தல் பொறுப்பாளர் ஆர்.ராசா எம்.பி-யின் கவனத்துக்குச் சென்றது. உடனே அவர் இரு தரப்பையும் நேரில் அழைத்து அவர்களைச் சமரசப்படுத்தி வைத்தார். ஆனால் கோஷ்டிப் பூசலுக்கு முற்றுப்புள்ளி ஏற்படவில்லை. தீவிரமாக எம்.எல்.ஏ சீட்களை கேட்டு சந்திரனும் பூபதியும் காயை நகர்த்தி வருகிறார்கள். இதில் பூபதியின் மனைவி நகர்மன்றத் தலைவியாக இருப்பதால் நகராட்சி நிர்வாகத்தில் பூபதி டீமின் கை ஓங்கி நிற்கிறது.
