மாதவிடாய் லீவு கட்டாயம் கோரி மனு; தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

நமது டில்லி நிருபர்

ஊதியத்துடன் மாதவிடாய் லீவு கட்டாயம் என அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக வழக்கறிஞர் சைலேந்திரா திரிபாதி சுப்ரீம்கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தார். அவர் மனுவில், ”மாணவிகள், பெண்கள், பணிக்கு செல்லும் பெண்கள் என அனைவருக்கும் மாதவிடாய் காலத்தில் விடுமுறை வழங்க வேண்டும். அது தொடர்பாக அனைத்து மாநிலங்களும் உரிய நெறிமுறைகளை உருவாக்க கோரி சுப்ரீம்கோர்ட் உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு இன்று (மார்ச் 13) சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

* மாதவிடாய் லீவு கட்டாயம் என அறிவித்தால் பெண்களுக்கு வேலை கிடைப்பது கடினமாகி விடும். பெண்களை யாரும் பணியமர்த்த மாட்டார்கள். அவர்களின் Career-ஐ முழுமையாக முடக்குவதோடு வீட்டிலேயே இருக்கும் சூழல் உருவாகிவிடும்.

* லீவு கட்டாயம் என ஒரு சட்டம் இயற்றப்பட்டால் அது உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும், பெண்கள் ஆண்களை விட தாழ்ந்தவர்கள் என்ற ஒரு தவறான பிம்பத்தை உருவாக்கி விடும்.

* இது முதலாளிகள் பெண்களை வேலைக்கு அமர்த்துவதை ஊக்கப்படுத்தாமல், அதன் மூலம் அவர்கள் பணியில் அமர்த்தாமல் தவிர்க்கும் நிலையை ஏற்படுத்திவிடும்.

* பல தனியார் நிறுவனங்கள் தன்னார்வத்துடன் விடுமுறை கொடுக்கிறார்கள், அது சிறந்தது. அது மிகவும் நல்ல விஷயம். ஆனால் நீங்கள் அதை சட்டத்தில் ஒரு கட்டாய நிபந்தனையாக அறிமுகப்படுத்தும் தருணத்தில், அது பெண்களின் வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த மனுவில் உள்ள கோரிக்கை தேவையில்லாத ஒரு அச்சத்தை உண்டாக்கும் வகையிலேயே அமைந்துள்ளது எனக் கூறி சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த விவகாரத்தில் எந்தப் பெண்ணும் நீதிமன்றத்தை அணுகவில்லை என்பதையையும் வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

Source link