புதுடில்லி: ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில், எல்பிஜி கவலைக்குரிய விஷயமாக உள்ளது எனக்கூறியுள்ள

புதுடில்லி: ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில், எல்பிஜி கவலைக்குரிய விஷயமாக உள்ளது எனக்கூறியுள்ள மத்திய அரசு, உள்நாட்டில் அதன் உற்பத்தி 30 சதவீதம் அதிகரித்துள்ளது என விளக்கமளித்துள்ளது.

மேற்காசியாவில் நடக்கும் மோதல் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து டில்லியில் விளக்கமளித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு( வணிகப்பிரிவு மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு) துறை கூடுதல் செயலாளர் சுஜாதா ஷர்மா கூறியதாவது: தினமும் 258 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிப்பில் தன்னிறைவு பெற்றுள்ளோம். நமது சுத்திகரிப்பு நிலையங்கள் அனைத்தும் முழு அளவிலும் அல்லது அதற்கு மேலும் செயல்பட்டு வருகின்றன. சுத்திகரிப்பு நிலையங்களில் போதுமான அளவு கச்சா எண்ணெய் உள்ளது. அதற்கான சப்ளை தொடர்கிறது. வீட்டு உபயோகத்துக்கான குழாய் வழியான இயற்கை எரிவாயு மற்றும் சிஎன்ஜி தடையின்றி வழங்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் பயப்பட தேவையில்லை.

பெரிய நகரங்கள் மற்றும் மையங்களில் வணிக ரீதியிலான சிலிண்டரை சார்ந்துள்ளவர்களுக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகளை சரி செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. பெட்ரோல் பம்புகளில் போதுமான அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பில் உள்ளது. எல்பிஜியை பொறுத்தவரை கவலைக்குரிய விஷயமாகவே உள்ளது. இந்த நிலைமை இருந்த போதிலும், பற்றாக்குறை ஏற்பட்டதாக 25 ஆயிரம் வினியோகஸ்தர்களிடம் இருந்து புகார் ஏதும் வரவில்லை. வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். பீதியுடன் கொள்முதல் செய்வதை தவிர்க்க வேண்டும் என மக்களை கேட்டுக் கொள்கிறோம்.

வீடுகளுக்கு சமையல் கேஸ் சிலிண்டர் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது. இன்றைய தேதியில் உள்நாட்டில் எல்பிஜி உற்பத்தி 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மார்ச் 5 ஐ ஒப்பிடும் போது, சுத்திகரிப்பு நிலையங்களில் கூடுதலாக 30 சதவீதத்திற்கும் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. வணிக ரீதியிலான சிலிண்டர் பொறுத்தவரை முன்னுரிமை அடிப்படையில் விநியோகம் செய்யப்படுவதை மாநில அரசின் வசம் விடப்பட்டுள்ளது. முன்னுரிமைக்கான வரம்புகளை நிர்ணயித்து, வணிக சிலிண்டர்கள் நுகர்வோரை சென்றடைவதை திறம்பட நிர்வகிக்க வேண்டும் என மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறோம்.

மாற்று எரிபொருள் வழிமுறைகளை செயல்படுத்தும் வகையில், சிறு, குறு மற்றும் பிற நுகர்வோர்களுக்கு நிலக்கரி எளிதாக கிடைப்பதை உறுதி செய்யுமாறு கோல் இந்தியாநிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குடிமக்கள் பதற்றம் அடைய வேண்டாம். பதற்றத்துடன் முண்டியடித்து முன்பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link