சென்னைக்கு வரம் சஞ்சு சாம்சன்: ரசிகர்கள் ஆர்வம்

சென்னை: உலக கோப்பை தொடரில் அசத்தினார் ‘சேட்டன்’ சஞ்சு சாம்சன். அடுத்து, சென்னை அணிக்காக விளாச காத்திருக்கிறார்.

சமீபத்தில் நடந்த ‘டி-20’ உலக கோப்பை தொடரில், துவக்க வீரராக சாம்சன் மிரட்டினார். வெஸ்ட் இண்டீஸ் (97* ரன், ‘சூப்பர்-8’ சுற்று), இங்கிலாந்து (89, அரையிறுதி), நியூசிலாந்துக்கு (89, பைனல்) எதிராக தொடர்ந்து மூன்று அரைசதம் கடந்து, இந்தியா மூன்றாவது முறையாக கோப்பை வெல்ல கைகொடுத்தார். 5 போட்டியில் 321 ரன் (ஸ்டிரைக் ரேட் 199.37) விளாசிய இவர், தொடர் நாயகன் விருது வென்றார். வரும் மார்ச் 28ல் துவங்கும் 19வது பிரிமியர் கிரிக்கெட் லீக் தொடரில், இம்முறை சென்னை அணிக்காக களமிறங்க உள்ளார்.

இது பற்றி இந்திய அணியின் முன்னாள் ‘ஸ்பின்னர்’ பியுஷ் சாவ்லா கூறுகையில்,”தனிநபராக வெற்றி தேடித் தரக்கூடியவர் சாம்சன். உலக கோப்பை தொடரில் வரிசையாக 3 அரைசதம் விளாசி, விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். சிறப்பான ‘பார்மில்’ இருப்பது சென்னை அணிக்கு சாதகம். கடந்த சீசனில் சிறந்த துவக்கம் கிடைக்காமல் தடுமாறியது. இம்முறை அதிரடி துவக்கம் தர அனுபவ சாம்சன் உள்ளார். இவருக்கு சென்னை ஆடுகளம் பொருத்தமானதாக இருக்கும். மறுபக்கம் விளாச, இளம் ஆயுஷ் மாத்ரே இருப்பதால், துவக்க பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது,” என்றார்.

தோனி எப்படி: இந்திய அணியின் முன்னாள் ‘ஆல்-ரவுண்டர்’ இர்பான் பதான் கூறுகையில்,”தோனியும் சாம்சனும் சேர்ந்து களமிறங்குவது கேப்டன் ருதுராஜுக்கு உதவியாக இருக்கும். முன்பு சென்னை அணியில் ‘சீனியர்’கள் அதிகம் இருந்தனர். எதிர்காலத்தை கணக்கில் கொண்டு, பிரவிஸ், உர்வில் படேல், ஷிவம் துபே, சர்பராஸ் கான் போன்ற இளம் வீரர்களை சேர்த்துள்ளனர். ரவிந்திர ஜடேஜா இடத்தை பிரஷாந்த் வீர் பூர்த்தி செய்யலாம்.

தோனி இல்லாமல் சென்னை அணி முழுமை பெறாது. இவரை மஞ்சள் நிற ஜெர்சியில் நாம் பார்ப்பது இதுவே கடைசி சீசனாக இருக்கலாம். இவர் இல்லாத சென்னை அணியை கற்பனை செய்வது கடினம். இந்த சீசனில் முக்கிய பங்கு வகிப்பார். ‘டிரஸ்சிங் ரூமில்’ இவர் இருப்பது சாம்சன், ருதுராஜ் உட்பட அனைத்து வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும். இவரது உடற்தகுதி, எத்தனை போட்டிகளில் பங்கேற்பார், எந்த இடத்தில் களமிறங்குவார் என்பது பற்றி, அணி நிர்வாகம் முடிவு செய்யும். சென்னை அணி ஆறாவது கோப்பை வென்று, தோனிக்கு பிரியாவிடை கொடுக்க விரும்பும்,”என்றார்.

Source link