மேற்காசிய நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல்: ஓமனில் இந்திய தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு

துபாய்: மேற்காசிய நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால், அப்பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. ஓமன் மீது ஈரான் நடத்திய, ‘ட்ரான்’ எனப்படும் ஆளில்லா சிறிய விமான தாக்குதலில், இந்தியர்கள் இருவர் உயிரிழந்தனர்.

மேற்காசிய பிராந்தியத்தில் இஸ்ரேல் – ஈரான் இடையே தொடர்ந்து மோதல் நடக்கிறது. இதனால், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சவுதி, ஓமன், பஹ்ரைன் என அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து, ஈரான் நேற்று உக்கிரமாக தாக்குதல் நடத்தியது. ஓமனில் உள்ள சோஹர் மாகாணத்தின் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில், அங்குள்ள தொழிற்பேட்டையில் பணியாற்றிய இந்தியர்கள் இருவர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

அதே போல், சலாலா துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எரிபொருள் சேமிப்பு டாங்கிகள் அழிக்கப்பட்டன. எனினும், இந்த தாக்குதலுக்கு ஈரான் பொறுப்பேற்கவில்லை. சவுதி அரேபியா மீதும் ஒன்றன்பின் ஒன்றாக ட்ரோன்கள் வீசப்பட்டன. 50 ட்ரோன்களை இடைமறித்து தாக்கி அழித்ததாக சவுதி தெரிவித்துள்ளது. துபாயின் முக்கிய நிதி மையமான டி.ஐ.எப்.சி., பகுதியில், ட்ரோன் பாகங்கள் விழுந்ததில் அந்த கட்டடம் சேதமடைந்தது. இதனால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுதும் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பஹ்ரைன் மீதும் தாக்குதல் தீவிரமானதால், பொதுமக்களை எச்சரிக்கை வகையில் சைரன் ஒலி எழுப்பப்பட்டது. ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையே நடந்து வரும் இந்த மோதலில், ஈரானில் மட்டும் இதுவரை, 1,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, லெபனானில் ஹெஸ்புல்லாவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். லெபனானில் மட்டும் இதுவரை, 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேறி, மற்ற நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ஈராக்கின் வடக்கு குர்து மாகாணமான இர்பில் பகுதியில் உள்ள பிரிட்டன் மற்றும் அமெரிக்க ராணுவ படைகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில், பிரான்ஸ் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த தகவலை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் உறுதி செய்தார்.

இதே பகுதியில் அமெரிக்க துருப்புகளை சேர்ந்த சில வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இர்பில் பகுதியில் இருந்த தங்களது ராணுவ முகாம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக இத்தாலி தெரிவித்துள்ளது. எனினும், பெரிய அளவில் சேதங்கள் ஏற்படவில்லை என உறுதி செய்துள்ளது.

மேற்காசிய நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்திய அதே சமயம், அந்நாட்டின் குர்து தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நடந்த பேரணியில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த சூழலில், ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டு தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தது.

நுாற்றுக்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக போர் விமானங்கள், ஏவுகணை தளங்கள், ராணுவ தளவாடங்கள், ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

அமெரிக்க அதிபர் டிரம்ப கூறுகையில், ‘ஈரானின் பயங்கரவாத ஆட்சியை ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அமெரிக்கா நிர்மூலமாக்கி வருகிறது. ஈரானின் கடற்படை அழிக்கப்பட்டு விட்டது. விமானப்படையின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. ஏவுகணைகள், ட்ரோன்கள் தகர்க்கப்பட்டு விட்டன. ஈரானின் முக்கிய தலைவர்கள் இந்த பூமியில் இருந்து விரைவில் துடைத்தெறியப்படுவர்’ என்றார்.

Source link