சென்னை: தமிழக பெண்கள் அச்சுறுத்தப்படும் சூழல் நிலவுவதாகவும், பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி விட்டதாகவும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.
இன்னும் ஓரிரு நாளில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், ஆளும் தி.மு.க.,வுக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளன.
பாதுகாப்பற்ற நிலை
துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில், பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது, தமிழகத்தையும் தாண்டி தேசிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இப்பிரச்னையை நேற்று ராஜ்யசபாவில் எழுப்பிய அ.தி.மு.க., – எம்.பி., இன்பதுரை, ”தி.மு.க., ஆட்சியில் தமிழகம் தினம் தினம் நிர்பயா வழக்கை சந்தித்து வருகிறது. கடந்த 10 நாட்களில், மூன்று பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன.
”தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. எனவே, பார்லிமென்ட் குழுவை அனுப்ப வேண்டும்,” என்றார்.
துாத்துக்குடி மாணவி வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அ.தி.மு.க., வழக்கு தொடர்ந்து உள்ளது.
துாத்துக்குடி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, விளாத்திகுளம் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
போராடும் மக்களை சமாதானப்படுத்த சென்ற தி.மு.க., துணை பொதுச்செயலரும், துாத்துக்குடி எம்.பி.,யுமான கனி மொழியை மக்கள் சூழ்ந்து, ‘எங்கள் பெண் குழந்தைகளுக்கு இது தான் நிலையா?’ என ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.
இதை சுட்டிக்காட்டியுள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனி சாமி, ‘துாத்துக்குடி நிர்பயாவுக்கு உரிய நீதி கிடைப்பதை, அ.தி.மு.க., உறுதி செய்யும். கனிமொழியை மக்கள் விரட்டி அடித்துள்ளனர். இது இத்துடன் முடியப் போவதில்லை.
‘வரும் 17ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மாவட்ட தலைநகரங்களில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்’ என, அறிவித்து உள்ளார்.
நிலைமை மாறவில்லை
தேர்தல் நேரத்தில் இப்பிரச்னை பெரிதாகி உள்ளது, தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க., – பா.ஜ., – பா.ம.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இப்பிரச்னையை கையிலெடுத்து, பெரிய அளவில் போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருகின்றன.
இச்சூழலில், தி.மு.க., கூட்டணியில் உள்ள ம.நீ.ம., தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு:
‘சாந்தமா, கோபப் படாம இருந்துட்டா, நதி சுத்தமாயிடுமா? நல்லவங்க எல்லாம் கோபப்படாம இருக்கறதுனால தான், இந்த மாதிரி சாக்கடையே ஓடுது.
‘இந்த மாதிரி சாக்கடையா வச்சிருக்கறதுனால தான், அவனவன் நானும் கொஞ்சம் ஒண்ணுக்கடிச்சா என்ன கெட்டுரும், காறி துப்பினா என்ன கெட்டுரும்னு செஞ்சிக்கிட்டே இருக்கான்’ என, சமூக இழிவுகளை கண்டு மனம் வெதும்பி, கடந்த, 32 ஆண்டுகளுக்கு முன், மகாநதி திரைப் படத்தில் நான் வெளிப் படுத்திய கருத்து இது. இன்னும் நிலைமை மாற வில்லை; அந்தக் கோபம் என்னுள் தீரவில்லை.
பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை, நாகரிக சமுதாயமாக கரு தவே முடியாது. அவர்கள் அச்சுறுத்தப்படும் சூழலில், எந்த வளர்ச்சிக்கும் அர்த்த மில்லை; எந்தப் பேச்சுக்கும் பொருளும் இல்லை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
மகாநதி திரைப்படத்தில் வரும் கடும் வார்த்தைகள் கொண்ட வசனத்தை வெளியிட்டு, தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என கமல் தெரிவித்துள்ள கருத்து, தமிழகத்தின் நிலையை அப்பட்டமாக எடுத்துக் காட்டுவதாக, அதற்கு பதில் அளித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் நேரம்
கமலின் இந்த பதிவு, நியாயமான கோபத்தின் வெளிப்பாடாக இருந்தாலும், ‘தி.மு.க.,வுக்கு எதிராக, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல உள்ளது.
‘துாத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கை வைத்து, தி.மு.க.,வை வீழ்த்த துடிக்கும் அ.தி.மு.க., – பா.ஜ.,வின் முயற்சிக்கு கைகொடுப்பது போல உள்ளது.
‘தேர்தல் நேரம் என்பதாலும், கூட்டணி கட்சித் தலைவர் என்பதாலும், கமலுக்கு பதில் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறோம்’ என, தி.மு.க.,வினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
