பாரா தடகளம்: இந்தியா அபாரம்

புதுடில்லி: பாரா தடகளத்தில் இந்தியா 75 தங்கம் உட்பட மொத்தம் 208 பதக்கங்களை கைப்பற்றி, முதலிடம் பிடித்தது.

டில்லியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா தடகள கிராண்ட் பிரீ போட்டி நடந்தது. ரஷ்யா, எகிப்து, போஸ்னியா உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து 257 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் ‘டி 44, 64’ பிரிவு போட்டி நடந்தது. இந்தியா சார்பில் களமிறங்கிய தமிழக வீரர் சோலைராஜ் தர்மராஜ், 7.05 மீ., தாண்டி முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்றார். மிட் பாரத்பாய் (6.12) சந்தீப் (5.96) வெள்ளி, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர்.

ஆண்களுக்கான 400 மீ., ஓட்டம் (‘டி 53, 54’ பிரிவு) நடந்தது. கடந்த ஆண்டு நடந்த போட்டியில் வெள்ளி வென்ற இந்திய வீரர் மனோஜ் குமார் சபாபதி (54.33 வினாடி, தமிழகம்), இம்முறை தங்கம் வசப்படுத்தினார். இந்தியாவின் அனில் குமார் (57.57) வெள்ளி கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரர் மணிகண்டன் ஜோதி (1:01.94, தமிழகம்) வெண்கலம் வென்றார்.

பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் அமிஷா, 10.42 மீ., துாரம் எறிந்து, தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார். மற்ற இந்திய வீராங்கனைகள் தயவந்தி (8.05), ஸ்நேகல் (6.93) வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்றனர்.

ஆண்கள் 400 மீ., ஓட்டத்தில் (‘டி 20’), ரஷ்ய வீரர்கள் செர்ஜி மகரோவ் (49.20 வினாடி), ஆர்செனி (50.47), சிமோனோவ் (50.86) முதல் மூன்று இடம் பிடித்து அசத்தினர்.

அதிக பதக்கம்

இந்தியா 75 தங்கம், 69 வெள்ளி, 64 வெண்கலம் என ஒட்டுமொத்தமாக 208 பதக்கம் கைப்பற்றி, பட்டியலில் முதலிடம் பிடித்தது. தவிர, இது கடந்த ஆண்டை விட அதிகம். முன்னதாக 2025ல் இந்தியா 45 தங்கம், 40 வெள்ளி, 49 வெண்கலம் என 134 பதக்கம் வென்றிருந்தது. ரஷ்யா 35 பதக்கத்துடன் (15 தங்கம், 14 வெள்ளி, 6 வெண்கலம்) இரண்டாவது இடம் பிடித்தது.

Source link