சென்னை: ‘அரசியல் முதிர்ச்சி இல்லாத நபர்களை, கட்சியை விட்டு விலக்குங்கள்’ என, த.வெ.க., தலைவர் விஜய்க்கு, தமிழக பா.ஜ., தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு அமைப்பாளர் அர்ஜுன மூர்த்தி கடிதம் எழுதி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
தங்கள் அரசியல் துவக்கம், தமிழகம் முழுதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், அந்த ஆரம்ப உற்சாகம், அரசியல் புரிதல், அனுபவம் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றுடன் இணைந்திருக்க வேண்டும்.
தங்கள் கட்சி நிர்வாகிகள் சிலர், குறிப்பாக ஆதவ் அர்ஜுனா போன்றோர், அரசியல் நாகரிகம் இல்லாத கருத்துகளால் தேவையற்ற மோதல்களையும், மரியாதை குறைபாடுகளையும் உருவாக்கி வருகின்றனர்.
தங்கள் மீதுள்ள மரியாதையும், அவர்கள் பேச்சால் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.
குறிப்பாக, தமிழ் மக்களின் மனதில் மிகுந்த மரியாதையும், பாசமும் பெற்ற நடிகர் ரஜினிகாந்தை குறைத்து பேசுவது, ஒருவரை உயர்த்தாது.
அது, தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும். தான் அதிகார அரசியலில் இல்லாத நேரங்களிலும், துணிச்சலான கருத்துகளை வெளிப்படையாக கூறியவர் ரஜினி. அதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.
அவரை குறைத்து பேசுவதன் வாயிலாக, யாரும் உயர்வதில்லை. மரியாதை கொடுத்தால் தான் மரியாதை கிடைக்கும் என்பது அரசியலின் அடிப்படை உண்மை.
எனவே, தங்கள் அரசியல் பயணம் வளர வேண்டும் எனில், தங்களின் சுற்றத்தில் உள்ள அரசியல் முதிர்ச்சி இல்லாத நபர்களை, கட்சியை விட்டு விலக்கி, அரசியல் நாகரிகத்தையும் பொறுப்பையும் முன்னிறுத்த வேண்டும். இல்லையேல், தமிழ் மக்களின் மனதில் உருவாகியிருக்கும் எதிர்பார்ப்பை இழக்கும் அபாயம் ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
