புதுடில்லி: ‘பிபா’ உலக கால்பந்து தொடரில் இந்திய அணி போல, ஈரான் பங்கேற்க மறுத்துள்ளது.
‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், வரும் ஜூன் 11-ஜூலை 19ல் நடக்க உள்ளது. 48 அணிகள் பங்கேற்க உள்ளன. கடந்த 8 தொடரில் 6வது முறையாக ஆசியாவின் பலம் வாய்ந்த ஈரான் (‘நம்பர்-20’) அணி பங்கேற்க இருந்தது. ‘ஜி’ பிரிவில் நியூசிலாந்து (ஜூன் 15), பெல்ஜியம் (21), எகிப்துடன் (26) மோத இருந்தது. இப்போட்டிகள் அமெரிக்காவில் நடக்க இருந்தன. ஆனால், அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்துள்ளன. இருப்பினும் ஈரான் அணி, அமெரிக்கா வந்து விளையாடலாம் என, அதிபர் டிரம்ப் உறுதி தெரிவித்தார்.
இதுகுறித்து ஈரான் விளையாட்டுத்துறை அமைச்சர் அகமது தொன்யமாலி கூறுகையில்,” எங்கள் தலைவரை கொலை செய்துள்ளனர். எங்கள் மீது போர் தொடுத்து, ஆயிரக்கணக்கான மக்களை கொன்றனர். இந்த சூழலில் அமெரிக்காவில் நடக்கும் உலக கால்பந்து தொடரில் எங்களால் பங்கேற்க முடியாது,” என்றார்.
இந்தியா வழியில்...
கடந்த 1950ல் உலக கோப்பை கால்பந்து தொடர் பிரேசிலில் நடந்தது. இதில் பங்கேற்க இருந்த இந்திய அணி, அதிகமான போக்குவரத்து செலவு காரணமாக விலகியது. 1952 ஒலிம்பிக் போட்டியில் கவனம் செலுத்தப் போவதாக கூறியது. இதே காரணத்திற்காக பிரான்ஸ் அணியும் விலகியது. தற்போது 76 ஆண்டுக்குப் பின், உலக கால்பந்தில் இருந்து ஒரு அணி (ஈரான்) விலகியுள்ளது.
யாருக்கு வாய்ப்பு
ஈரான் விலகியதால், ஆசிய தரவரிசையில் முன்னணியில் உள்ள ஈராக் (9வது) அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (10) அணிக்கு ‘உலக’ வாய்ப்பு கிடைக்கலாம்.
* வரும் மார்ச் 31ல் வடக்கு மெக்சிகோவில் நடக்கும் ‘இன்டர் கான்பெடரேசன்’ பைனலில் ஈராக்- பொலிவியா/சுரினாம் அணிகள் மோதும். இதில் ஈராக் வென்றால் நேரடியாக உலக தொடருக்கு தகுதி பெறும். ஈரான் இடம் எமிரேட்சிற்கு கிடைக்கும்.
* ஒருவேளை ஈராக் தோற்றால், தரவரிசைப்படி ஈரானின் வாய்ப்பை தட்டிச் செல்லும்.
