பரமக்குடி: ”காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகளை தி.மு.க., கொடுத்துள்ள நிலையில், மா.கம்யூ., கட்சிக்கும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற முயற்சிப்போம், ” என மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், நேற்று முன்தினம் நடந்த மா.கம்யூ., கூட்டத்தில் அவர் பேசியதாவது: மானாமதுரை ‘லாக்கப்’ மரணம் உட்பட, தமிழகத்தில் நடைபெறும் அனைத்து சம்பவங்களிலும், குற்றம் செய்தவர்கள் மீது தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதுதான் முதல்வர் ஸ்டாலினுக்கு பெருமை சேர்க்கும்.
சம்பந்தப்பட்ட போலீசார் மீது, உடனே நடவடிக்கை எடுத்திருந்தால், போராட்டம் நீடித்திருக்காது. தி.மு.க., ஆட்சியை காவல்துறை காப்பாற்றாது; மக்கள் தான் காப்பாற்றுவர்.
கூட்டணியில், காங்கிரசுக்கு கூடுதல் தொகுதியை தி.மு.க., கொடுத்துள்ளது. தே.மு.தி.க.,விற்கு, ஏற்கனவே வழங்கிய ஒரு ராஜ்யசபா எம்.பி., ‘சீட்’ போக, அதிக தொகுதி கொடுப்பர் என்கின்றனர்.
மா.கம்யூ., கட்சிக்கு, கடந்த முறை போட்டியிட்ட அதே எண்ணிக்கையிலான தொகுதிகளை பெறமாட்டோம். இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற முயற்சிப்போம். கூடுதலாக எம்.எல்.ஏ., பெற வேண்டும் என விரும்புகிறோம்.
புதிதாக கட்சி துவங்கிய விஜய், தமிழகத்தை மாற்ற, குறைந்தபட்ச இலக்காக, என்ன வைத்துள்ளார்? தி.மு.க., தீய சக்தி என்று கூறினால் மட்டும் போதாது, வாலிபர் சக்தியை சரியாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
