மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி விலக்கப்பட்டது: விரைவில் அமைகிறது புதிய அரசு

புதுடில்லி: மணிப்பூரில் புதிய அரசு பதவியேற்க ஏதுவாக,அங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இட ஒதுக்கீடு தொடர்பாக மெய்டி – கூகி பிரிவினர் இடையே கடந்த2023 மே மாதம் முதல் மோதல் வெடித்து கலவரமாக மாறியது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களுக்கு புலம்பெயர்ந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பாஜவை சேர்ந்த முதல்வர் பைரேன் சிங் பதவியில் இருந்து விலகினார். அங்கு கடந்த ஆண்டு பிப்.,13 முதல் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது.மணிப்பூரில் பதற்றம் தணிந்து மெல்ல அமைதி திரும்பி கொண்டு உள்ளது.

இதனையடுத்து அங்கு மீண்டும் புதிய அரசு அமைக்கும் முயற்சியில் பாஜ ஈடுபட்டது. நேற்று நடந்த அக்கட்சி கூட்டத்தில், எம்எல்ஏக்கள் குழு தலைவராக யம்நம் கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டார். அவர் விரைவில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் புதிய அரசு அமைப்பதற்கு ஏதுவாக, மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி உடனடியாக விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Source link