தொண்டாமுத்தூர்: ”தமிழகத்தில் குழந்தை முதல் பாட்டி வரை பாதுகாப்பு இல்லை,” என, பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார்.
பா.ஜ., சார்பில், ‘நாளை நமதே’ ‘தமிழ்நாடும் நமதே’ என்ற தெருமுனை பிரசாரம், கோவை, தொண்டாமுத்தூரில் நேற்று நடந்தது. பா.ஜ., தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர் வரவேற்புரையாற்றினார். பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது; தி.மு.க., இதுவரை எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. தி.மு.க.,வினர், ஒரு திட்டமாவது செயல்படுத்தியிருந்தால், வாருங்கள் ஒரே மேடையில் நேருக்கு நேர் வெளிப்படையாக பேசுவோம். தி.மு.க., ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை.18 வயது முதல் பாட்டி வரை உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தி.மு.க., ஆட்சியின் அவலநிலை குறித்து அண்ணாமலை பேசுவார். அவரின் பேச்சை கேட்க நானும் ஆர்வமாக இருக்கிறேன்,என்றார்.
பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது; கடந்த, 10ம் தேதி, தூத்துக்குடி, மாவட்டம் விளாத்திகுளத்தில், 17 வயது சிறுமி, கொலை செய்யப்பட்டுள்ளார். அதேபோல, கிருஷ்ணகிரியில், 2 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. தமிழகத்தில், இன்று, குழந்தை முதல் பாட்டி வரைக்கும் பாதுகாப்பு இல்லை.
கடந்த 5 ஆண்டுகளில், மகளிருக்கு 37 ஆயிரம் கொடுத்துள்ளனர். மொத்தம், 1,825 நாட்களில், ஒரு நாளுக்கு, 20 ரூபாய் வீதம் கொடுத்துள்ளனர். 2021ல், ஒரு குடும்பத்திற்கு, 2.10 லட்சம் ரூபாய் கடன் இருந்தது. தற்போது, 4.82 லட்சமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மகளிருக்கு, திமு.க., 37 ஆயிரத்தை கொடுத்துவிட்டு, அவர்களிடமிருந்து, ரூ. 2.72 லட்சத்தை திருடியுள்ளது. தி.மு.க.,விற்கு நாம் ஓட்டு போடுவது, நம் தலையில் நாமே மண் அள்ளி போட்டுக் கொள்வதற்கு சமம். வடவள்ளியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை தி.மு.க., நிர்வாகி ஆக்கிரமித்து தங்கியிருந்தார்.
5 ஆண்டுகளில், 8,008 படுகொலைகள் நடந்துள்ளது. 2,080 கற்பழிப்புகள் நடந்துள்ளது. 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் மீது 39,900 குற்ற சம்பவங்கள் நடந்துள்ளது. சராசரியாக, ஒரு நாளுக்கு, 22 குழந்தைகள் மீது குற்ற சம்பவங்கள் நடக்கிறது. இதனால் எந்த காரணத்தை கொண்டும், தி.மு.க., ஆட்சிக்கு வரக்கூடாது. கோவை மக்கள், பக்கத்து ஊரையும் கெடுத்து விடுவார்கள் என, தயாநிதிமாறன் கூறும்போது செந்தில் பாலாஜி கைதட்டி சிரிக்கிறார். இதற்கு, வரும் தேர்தலில் தி.மு.க.,வுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள்.’ இவ்வாறு அவர் கூறினார்,
