சென்னை: தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், கிராம உதவியாளர்களுக்கு, நான்காம் நிலைக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி, பிப்., 5 முதல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
போராட்டத்தின் 37ம் நாளான நேற்று, சென்னை எழிலகம் வளாகத்தில், அச்சங்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் முருகன் தலைமையில், 600க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம உதவியாளர்கள் சிலர் கூறியதாவது: தொடர்ந்து போராடி வரும் எங்களிடம், ‘போராட்டத்தை கைவிட்டு, சொந்த ஊருக்கு சென்று விடுங்கள்.
இல்லையென்றால், உங்கள் அனைவரையும் கைது செய்து, சிறையில் அடைப்பதுடன், நீதிமன்றத்திற்கு அலைய விட்டு விடுவேன்’ என, போலீஸ் அதிகாரிகள் மிரட்டல் விடுக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, தமிழகத்தில் 2,381 அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளி வளாகங்களில், எல்.கே.ஜி., யு.கே.ஜி., என, மழலையர் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதில், 2,381 முன் பருவக்கல்வி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு முன்பருவக்கல்வி ஆசிரியர் நல சங்கம் சார்பில், சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
