கொலையான மாணவியின் வீட்டிற்கு சென்ற கனிமொழியை முற்றுகையிட்ட பெண்கள்

துாத்துக்குடி: பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூற சென்ற கனிமொழி எம்.பி.,யை, பெண்கள் முற்றுகையிட்டனர்.

துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி, கொலை செய்யப்பட்டு, காட்டு பகுதியில் சடலமாக கிடந்தார். குளத்துார் போலீசார் விசாரித்தனர். குற்றவாளிகளை பிடிக்க, 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலை யாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மாணவியின் உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், மாணவியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற, துாத்துக்குடி தி.மு.க., – எம்.பி., கனிமொழி, நேற்று வேடநத்தம் கிராமத்திற்கு சென்றார். அவருடன் அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்டோர் சென்றனர். ‘குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர், அரசு துணை நிற்கும்’ என, மாணவியின் பெற்றோரிடம், கனிமொழி எம்.பி., உறுதி அளித்தார்.

‘மாணவியின் சகோதரிக்கு அரசு வேலை வேண்டும்’ என, குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். ‘நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என, அவர் உறுதி அளித்தார். வீட்டை விட்டு வெளியே வந்த அவரை, கிராம மக்கள் முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ‘குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம்’ என, குடும்பத்தினர் கூறினர்.

மிருகத்தனமான செயல்

துாத்துக்குடி விமான நிலையத்தில், சபாநாயகர் அப்பாவு நேற்று அளித்த பேட்டியில், ”பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒரு மிருகத்தனமான செயல். வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் முதல்வர் கடும் நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்குவார்,” என்றார்.

Source link