திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலின் ரூ.10,000 கோடி நிலங்கள் ஆக்கிரமிப்பு? அறநிலையத்துறை அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான, 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய மனுவுக்கு, இரண்டு வாரத்தில், அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாம்பரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சந்தானம் என்பவர் தாக்கல் செய்த மனு:

செங்கல்பட்டு மாவட்டம், திருநீர்மலையில் உள்ள ரங்கநாத பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான 1,050 ஏக்கர் நிலங்கள் இருந்ததற்கான வருவாய் ஆவணங்கள் உள்ளன. வருவாய் ஆவணங்களை திருத்தி, போலி ஆவணங்கள் வாயிலாக, கோவில் நிலங்களை பலர் ஆக்கிரமித்து உள்ளனர்.

தற்போது, கோவிலுக்கு சொந்தமாக 157 ஏக்கர் நிலங்கள் மட்டுமே உள்ளன. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள இக்கோவிலின் நிலங்களின் தற்போதைய மதிப்பு 10,000 கோடி ரூபாய்.

இதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், வீரராகவ கோவிலுக்குச் சொந்தமான 5.50 ஏக்கர் நிலங்கள், நாட்டரசன்பட்டு ஸ்ரீ ஆலவட்டம்மன் கோவிலுக்கு சொந்தமான 13.52 ஏக்கர் நிலங்கள்.

நாட்டரசன்பட்டு கற்பக விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 82 சென்ட் நிலங்கள், குன்றத்துார் காமாட்சி அம்மன் கோவில், விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களின் நிலங்களை, சட்டவிரோதமாக பலர் ஆக்கிரமித்துள்ளனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கோவில்களின் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

கோவில் நில ஆவணங்களை திருத்தி வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்து, தவறிழைத்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரியும் மனு அளித்தேன். இந்த மனுக்களை பரிசீலித்து, தகுந்த உத்தரவை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.சுரேந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.ஏழுமலை ஆஜராகி, ”கோவில் நிலங்களின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு, அறநிலையத்துறை மற்றும் வருவாய் அதிகாரிகளும் துணை போய் உள்ளனர். இது தொடர்பாக பல முறை புகார் மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,” என்றார். இதையடுத்து, மனுவுக்கு இரண்டு வாரங்களில், ஹிந்து சமய அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Source link