மேற்காசிய போர் காரணமாக, கடந்த இரண்டு வாரங்களாகவே சரிவை சந்தித்து வரும் இந்திய பங்குச் சந்தைகள், இந்த வாரம் மட்டும் கிட்டத்தட்ட ஐந்து சதவீதம் வீழ்ச்சியடைந்து உள்ளன. கடந்த 2022 ஜூன் மாதத்துக்கு பின், இதுவே ஒரு வாரத்தில் ஏற்பட்ட மோசமான சரிவாகும். கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் மட்டும், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு, கிட்டத்தட்ட 20 லட்சம் கோடி ரூபாய் சரிந்துள்ளது. நேற்று மட்டும் 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் கிடைக்காமல், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதை சமாளிக்க, சர்வதேச எரிசக்தி முகமை, தன்வசமுள்ள 40 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் இருப்புகளை சந்தையில் விடுவிப்பதாக அறிவித்த நிலையில், ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான பொருளாதார தடையை அமெரிக்கா தளர்த்தியுள்ளது.
இருப்பினும், நேற்று கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் மீண்டும் 100 டாலரை கடந்தது. இதனால், முதலீட்டாளர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் பங்கு களை விற்றுத் தள்ளினர்.
இதன் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளன. தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே வரும் நிலையில், போர் எப்போது முடிவுக்கு வரும் என்று கணிக்க முடியாததால், முதலீட்டாளர்களிடம் விற்பனை மனநிலை மேலோங்கியுள்ளது.
அனைத்து துறை வாரியான குறியீடுகளும் வீழ்ச்சி கண்டன. உலோகம் மற்றும் வாகனத்துறை பங்குகள் அதிக அளவில் சரிந்தன.
இதனிடையே, இம்மாதம் முழுதும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும் சூழல் ஏற்பட்டால், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 150 டாலரை கடக்கும் அபாயம் உள்ளதாக, ‘கோல்டுமேன் சாக்ஸ்’ நிறுவனம் எச்சரித்து உள்ளது.
‘நிப்டி ஆட்டோ’ குறியீட்டில் கடந்த ஒரு வாரத்தில் அதிக சரிவு கண்ட பங்குகள் (%)
பாரத் போர்ஜ் 13.20
அசோக் லேலண்டு 12.16
டி.வி.எஸ்., மோட்டார் 12.07
ஐச்சர் மோட்டார்ஸ் 11.23
டாடா மோட்டார்ஸ் பேசஞ்சர் வெஹிக்கிள்ஸ் 10.42
