நமது நிருபர்
போர் எவ்வளவு காலம் நீடிக்கக்கூடும் என்ற கேள்விக்கு, ”அதை என்னால் உங்களிடம் சொல்ல இயலாது. அதைத் தெரிந்துகொள்வதால் என்ன பயன் இருக்கப்போகிறது?” என அமெரிக்கா அதிபர் டிரம்ப் பதில் அளித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: மத்திய கிழக்கிலும், உலகம் முழுவதும் நிலவும் அணு ஆயுத அச்சுறுத்தலை நாங்கள் முடிவுக்குக் கொண்டுவர வேண்டியிருந்தது. முன்னெப்போதும் எவரும் கண்டிராத ஒரு ஆதிக்க நிலையில் நாங்கள் தற்போது இருக்கிறோம்.
அவர்களின் கடற்படை அழிந்துவிட்டது; அவர்களின் விமானப்படை அழிந்துவிட்டது; மேலும் அவர்களின் ராணுவத்தின் பெரும்பகுதியும் அழிந்துவிட்டது. அவர்களிடம் இப்போது எந்தவிதமான ரேடார் வசதியும் இல்லை. இன்று நாங்கள் மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளோம். மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல்கள் அவை. ஈரானுடனான போரில் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இலக்குகள் சற்று மாறுபட்டவையாக இருக்கக்கூடும் என்றே நான் கருதுகிறேன்.
அவர்கள் நம்மைவிட முற்றிலும் மாறுபட்ட ஒரு நாடு. ஆனால், அமெரிக்காவின் வல்லமைக்கு ஈடான வேறொரு வல்லமை உலகில் இதுவரை இருந்ததே இல்லை என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவே உங்களிடம் கூறுவார். எனது முதல் பதவிக்காலத்திலேயே நமது ராணுவத்தை நான் மிக வலிமையானதாகக் கட்டமைத்தேன். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.
விரைவில் நடக்கும்!
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளித்துச் செல்லும் பணியை அமெரிக்கக் கடற்படை எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு, ‘அது விரைவில் நடக்கும்; மிக விரைவில் நடக்கும்,’ என்று டிரம்ப் பதிலளித்தார்.
குண்டுவீச்சுத் தாக்குதல்
மத்திய கிழக்கு வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த தாக்குதலாக, ஈரானின் கார்க் தீவில் அமெரிக்கா குண்டுவீச்சு நடத்தியது என அதிபர் டிரம்ப் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எனது வழிகாட்டுதலின் பேரில், அமெரிக்க படையினர் மத்திய கிழக்கு வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த குண்டுவீச்சுத் தாக்குதல்களில் ஒன்றை நடத்தி இருக்கின்றனர்.
ஈரானின் மணிமகுடமான கார்க் தீவில் உள்ள ஒவ்வொரு ராணுவ இலக்கையும் முற்றிலுமாக அழித்தது.ஈரான் அல்லது வேறு யாராவது, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் செல்வதில் தலையிட ஏதாவது செய்தால், நான் உடனடியாக இந்த முடிவை மறுபரிசீலனை செய்வேன்.
ஈரானிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்காது. அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலகை ஈரான் இனி அச்சுறுத்த முடியாது. ஈரானின் இராணுவமும் இந்த பயங்கரவாத ஆட்சியில் ஈடுபட்டுள்ள மற்ற அனைவரும் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, தங்கள் நாட்டில் எஞ்சியிருப்பதைக் காப்பாற்றுவது புத்திசாலித்தனமாக இருக்கும். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
