எந்த அரசும் நிரந்தரம் இல்லை: ராஜ்யசபாவில் கமல் பேச்சு

புதுடில்லி: ” எந்த அரசும் நிரந்தரமானது இல்லை,” என ராஜ்யசபாவில் மநீம கட்சி தலைவர் கமல் பேசினார்.

ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட கமல், இன்று முதல்முறையாக அவையில் தனது உரையை நிகழ்த்தினார்.

அப்போது அவர் பேசியதாவது: பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இருக்கும் இந்த அவைக்குள் நுழைந்து பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. எனக்கு சினிமா மூலம் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. சினிமா என்னை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. தமிழ் வரலாற்றுக்கு என்னை அறிமுகப்படுத்தியது.

இந்த தருணத்தை நான் கவுரவமாக கருதுகிறேன். என் தமிழ் ஆசிரியர்களால் என் மொழி எனக்கு அறிமுகமானது. அவர்களில் ஒருவர் அண்ணாதுரை. நமது கலாசாரம், உரிமைகள் மீது ஏற்படும் எந்தவொரு படையெடுப்பையும் எதிர்கொள்ள அவர் எங்களுக்கு கற்றுக் கொடுத்தார்.

நான் உயர்நிலை பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவன் என்பதால், பொருளாதாரம் குறித்து பேச எனக்கு தகுதி இல்லை என நீங்கள் சொல்லலாம். அது அப்படியே இருக்கட்டும்.

தமிழனாக எனக்கு ஒரு கருத்து இருக்கிறது. கோபமின்றி இந்த உரையை எழுத எனக்கு கற்றுக் கொடுத்தது மஹாத்மா காந்தி. இந்த அவையை புரிந்து கொள்ள அண்ணாதுரை உதவினார்.

எனது உடனடி கவலை வரவிருக்கும் தேர்தல்தான். தற்போதைய நிகழ்வுகளை மனதில் வைத்து மட்டுமே இதனை எழுதினேன். ஆனால், தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஓட்டளிப்பதற்கான எங்களின் உரிமையை சரிபார்க்கிறார்கள். அவர்கள் பெயர்களின் எழுத்துக்களையும் முகவரிகளையும் சரிபார்க்கிறார்கள். ஆனால் அதனையும் தவறாக செய்கிறார்கள். நாங்கள் எங்களது ஓட்டுகளை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறோம்.

ஜனநாயக அமைப்பு வேறுபாடுகளை புறக்கணிக்கக்கூடும். ஆனால், மக்களை புறக்கணித்து விடக்கூடாது. அதனை அனுமதிக்க முடியாது. யாரும் நிரந்தரமானவர்கள் அல்ல. எந்தவொரு அரசும் நிரந்தரம் கிடையாது. அதனை நோக்கமாகவும் கொள்ளக்கூடாது. உலக வரலாற்றில் எந்த அரசும் இதனை அடைந்தது இல்லை. இனியும் அடையப்போவது இல்லை.எழுதப்படாத உலகளாவிய சட்டத்துக்கு இந்த அரசும் உட்பட்டது.

குழந்தைகள் கவனிக்கின்றனர். இளம் தலைமுறையினர் கவனிக்கின்றனர். வளரும் முற்போக்கான ஜனநாயகத்துடன் வளர விட வேண்டும். இதனால், குறைந்தபட்சம் நாளையாவது நமது நாளாக இருக்கும். இவ்வாறு கமல் பேசினார்.

Source link