Gas Shortage | சிலிண்டர்கள் பதுக்கி வைத்து விற்பனை: திருப்பூரில் கியாஸ் நிறுவனத்துக்கு ‘சீல்’, Gas company in Tiruppur sealed for hoarding cylinders and selling

திருப்பூர்:

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் போர் காரணமாக இந்தியா முழுவதும் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் முடங்கியுள்ளது. திருப்பூரில் வர்த்தக கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்களில் உணவுப்பண்டங்கள் தயாரிப்பை குறைத்துவிட்டனர். சில ஓட்டல்கள் மூடப்பட்டுவிட்டன.

வீட்டு உபயோக சிலிண்டர்களை முன்பதிவு செய்ய தனியார் கியாஸ் நிறுவனங்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த தட்டுப்பாட்டை காரணம் காட்டி, கியாஸ் சிலிண்டர்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இவ்வாறு கியாஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே உத்தரவின் பேரில், மாவட்ட வழங்கல் அதிகாரி தலைமையிலான குழுவினர் தனியார் கியாஸ் நிறுவனங்கள் மற்றும் குடோன்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வீரபாண்டி வாய்க்கால்மேடு பாரியூர் அம்மன் நகரில் உள்ள தனியார் கியாஸ் நிறுவனத்தில் சிலிண்டர்கள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக நல்லூர் நுகர்வோர் நல மன்றம் சார்பில் மாவட்ட வழங்கல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட தனியார் கியாஸ் நிறுவனத்தில் மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன் சென்று ஆய்வு செய்தார். ஆனால் அந்த நிறுவனம் மூடப்பட்டு இருந்தது.

சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளரிடம் செல்போனில், அதிகாரி தொடர்பு கொண்டதற்கு அவர் சரிவர பதில் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் சம்பந்தப்பட்ட கட்டிடத்துக்குள் கியாஸ் சிலிண்டர்கள் இருக்க வாய்ப்பு உள்ளதால் அந்த கட்டிடத்தை, மாவட்ட வழங்கல் அதிகாரி பூட்டி ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் நேரில் வந்து விளக்கம் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source link