பெட்ரோல், டீசல் இல்லாம சைக்கிள்லதான் போய் ஓட்டு கேக்கணும் போல; போர் குறித்து சீமான் ஆவேசம்

திருச்சி: ”டீசல் இல்லாம சைக்கிள்லதான் போய் ஓட்டு கேக்கணும் போல; உலக நாடுகள் தலையிட்டு போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


திருச்சியில் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: 6 வயசு குழந்தைக்கும் பாதுகாப்பு இல்லை. 60 வயசு அம்மாவுக்கும் பாதுகாப்பு இல்லை. படிக்க போகும் 14 வயது பிள்ளைக்கும் பாதுகாப்பு இல்லை. சமூகத்தின் ஒழுக்க சீர்கேடுகளால் பெண்களுக்கு பாதுகாப்பு குறைந்து வருகிறது. குற்றங்களில் ஈடுபவர்களில் பெரும்பாலானோர் போதையில் இருக்கின்றனர். தடுப்பதற்கு அரசுக்கு மட்டுமல்ல, சமூகத்திற்கும் பொறுப்புள்ளது. மேலும், ஜாதி அரசியலாக மாறினால் சமத்துவம் அழியும், மதம் அரசியலாக மாறினால் மனிதம் அழியும்.

நல்ல ஒழுக்கம்

பணம் அரசியலாக மாறினால் பண்பாடு மற்றும் ஒழுக்கம் அழியும். நல்ல ஒழுக்கம் மற்றும் அறநெறி கொண்ட சமூகத்தை உருவாக்க அனைவரும் உறுதி எடுக்க வேண்டும். தமிழக அரசியலில் மாற்றம் வர வேண்டும் தான் என்று கட்சி ஆரம்பிக்கிறார்கள். மாற்றத்தை கொண்டு வர வாழ்த்துவோம். நாங்கள் எளிய பிள்ளைகள். பொருளாதார பின்புலம் இல்லாததால் முன் கூட்டியே ஓட தொடங்க வேண்டும். அவர்கள் தொலைக்காட்சி, செய்திதாள்களில் முழு பக்கம் விளம்பரம் கொடுத்துவிடுவார்கள். எங்களுக்கு அதற்கு எல்லாம் வசதி இல்லை.

பெரிய பின்னடைவு

உலக அரசியலை பொறுத்தவரை ஈரான், இஸ்ரேல் போர் போன்ற சர்வதேச மோதல்களில் பல நாடுகள் தலையிட்டு தீர்வு காண வேண்டும். போர் எப்போதும் மனித உயிர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். போரை வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பதால் நமக்கு எவ்வளவு பெரிய பின்னடைவு. காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் இல்லாம சைக்கிள்லதான் போய் ஓட்டு கேக்கணும் போல. போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

அரசியல் நோக்கம்

போரை எவ்வளவு நாட்கள் வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பது? இந்த போரில் ஒரு நியாயம் இருக்கு என்று சொல்லுங்கள். எதுக்குதான் இந்த போர்? தமிழக அரசியல் போட்டியில் நாம் தமிழர் கட்சி முன்வைக்கும் அரசியல் மக்களுக்கு தேவையா? இல்லையா? என்பதே முக்கியம். மற்றவர்கள் அரசியலுக்கு வருவது தங்கள் கட்சியை பாதிக்காது. கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை வசதி மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய அடிப்படை தேவைகள் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் அரசியல் நோக்கம். இவ்வாறு சீமான் கூறினார்.

Source link