புதுடில்லி: மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழலால், எரிபொருள் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, விமான சேவைக் கட்டணத்தை உயர்த்துவதாக ஆகாசா ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் காரணமாக, உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை பல்வேறு நாடுகள் உயர்த்தி விட்டன. விமான எரிபொருளின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், மார்ச் 15 முதல் புதிய எரிபொருள் கூடுதல் கட்டணத்தை அறிமுகப்படுத்துவதாக ஆகாசா ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், விமான டிக்கெட்டுகளின் விலை ரூ.199 முதல் ரூ.1,300 வரை அதிகரிக்கிறது. பயண தூரம் மற்றும் பயண நேரத்தைப் பொறுத்து டிக்கெட் விலை மாறுபடும் என்றும், மார்ச் 15ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த விலை உயர்வு பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்களின் டிக்கெட்டுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ விமானங்களின் உள்நாட்டு டிக்கெட்டுகளுக்கு ரூ.425 வரையிலும், வெளிநாட்டு பயணங்களுக்கு ரு.2,300 வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
ஏர் இந்தியாவை பொறுத்தவரையில் விமானங்களின் உள்நாட்டு டிக்கெட்டுகளுக்கு ரூ.399 வரையிலும், வெளிநாட்டு பயணங்களுக்கு ரு.18,000 வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
