நிருபர்களை தாக்கிய திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்; விஜய் வலியுறுத்தல்

சென்னை: ஊடகவியலாளர்கள் மீது திமுக எம்எல்ஏ தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தவெக தலைவர் நடிகர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;

ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது.

குவாரி தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கொடூரமாகத் தாக்குதல் நடத்திய வீடியோ, அண்மையில் வெளியானது. அதற்குப் பிறகும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்க்கும் நிலையில் தான் முதல்வர் இருக்கிறார் என்பது வெட்கக்கேடானது.

பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, பொதுவெளியில் இவ்வளவு மோசமாகச் செயல்படுவது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்றாகும்.

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழகமே பாதுகாப்பின்றிப் பதைபதைத்து இருக்கையில், தூக்கத்தில் இருக்கும் முதல்வரால் மக்கள் துயரத்தில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட ஆட்சியை மக்கள், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறிவது உறுதி, உறுதி. உறுதி.

இவ்வாறு விஜய் அறிக்கையில் கூறியுள்ளார்.

Source link