வாஷிங்டன்: கச்சா எண்ணெய் தடையில்லாமல் கிடைக்க வேண்டுமானால், ஹார்முஸ் ஜலசந்தி மூடியதால் பாதிக்கப்பட்ட நாடுகள் தங்களின் போர்க்கப்பல்களை அனுப்புமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில்; ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூட முயற்சிப்பதால், அதனால், பாதிக்கப்பட்டுள்ள பல நாடுகள், அமெரிக்காவுடன் இணைந்து அந்தப் பாதையைத் திறந்து வைக்கவும், பாதுகாக்கவும் தங்கள் போர்க்கப்பல்களை அனுப்பவுள்ளன. ஈரானின் ராணுவத் திறனை நாங்கள் ஏற்கனவே 100 சதவீதம் அழித்துவிட்டோம். அவர்கள் (ஈரான்) மோசமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், ஹார்முஸ் ஜலசந்தியில் டிரோன்கள், ஏவுகணைகளைக் கொண்டு தாக்குவது, கண்ணிவெடிகளை இடுவது போன்ற செயல்களை செய்து வருகின்றனர்.
சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் ஈரான் உருவாக்கியுள்ள இந்த செயற்கை தடையால் பாதிக்கப்பட்டுள்ள பிற நாடுகள், இப்பகுதிக்குத் தங்கள் கப்பல்களை அனுப்புவார்கள் என்று நம்புகிறேன். இதன் மூலம், முற்றிலும் நிலைகுலைந்து போன ஒரு நாட்டினால் (ஈரான்), இனி ஹார்முஸ் ஜலசந்திக்கு அச்சுறுத்தல் இருக்காது.
ஈரான் கடற்கரைப் பகுதிகளில் அமெரிக்கா குண்டுமழை பொழியும். கடலில் இருந்து ஈரான் படகுகள் மற்றும் கப்பல்களை சுட்டு வீழ்த்துவோம். விரைவில் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பான பாதையாக மாற்றுவோம், இவ்வாறு அவர் கூறினார்.
