ஏரியில் அளவுக்கு மீறி மண் அள்ளப்பட்டுள்ளதா? அண்ணா பல்கலை ஆய்வுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: செங்கல்பட்டு முள்ளிகுளத்துார் ஏரியில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மண் அள்ளப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, அண்ணா பல்கலைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், முள்ளிகுளத்துாரை சேர்ந்த விவசாயி டி.சவுந்தரராஜன் தாக்கல் செய்த மனு: மாமல்லபுரம் முதல் முகையூர் வரையிலான, 31 கி.மீ., தொலைவுக்கு, நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடக்கின்றன.

இந்த பணிகளுக்காக, திருக்கழுக்குன்றம் தாலுகாவில் உள்ள முள்ளிகுளத்துார் ஏரியில் இருந்து மண் அள்ள, அண்ணாநகரை சேர்ந்த, ‘அமோபிண்டோ ரியாலிட்டி மற்றும் உள்கட்டமைப்பு பிரைவேட் லிமிடெ்ட்’ என்ற நிறுவனத்துக்கு, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்கி உள்ளார்.

குடிநீர், விவசாயத்துக்கு, இந்த ஏரி தான் பிரதானம். நுாற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள், இந்த ஏரியை நம்பியே உள்ளன. ஏரியின் தற்போதைய ஆழம், கட்டமைப்பு நிலையை சரிபார்க்காமல், குவாரி செயல்பாடு அனுமதிக்கப்பட்டு உள்ளது.

மண் அள்ள, ஏரியில் இருந்து நீரை வெளியேற்றும் நடவடிக்கை, ஒரு நீர்நிலையை அழிப்பதற்குச் சமம். இது, அப்பகுதி மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

உள்ளூர் மக்கள், விவசாயிகளிடம் கருத்து கேட்காமல், ஏரியில் மண் அள்ள கலெக்டர் அனுமதி அளித்துள்ளார். எனவே, ஏரியில் இருந்து மண் அள்ள அனுமதி வழங்கி, கடந்த மாதம் 10ம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மண் அள்ள இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.எல்.ஜெயகாந்தன் ஆஜராகி, ”ஏரியில் இருந்து 30,000 மெட்ரிக் டன் அளவுக்கு மட்டுமே மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட, தனியார் நிறுவனம் கூடுதலாக மண்ணை அள்ளியுள்ளது. எனவே, வழக்கறிஞர் கமிஷனரை நியமித்து, ஏரியை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்,” என்றார்.

இதையடுத்து, நீதிபதி எம்.தண்டபாணி பிறப்பித்த உத்தரவில்,’முள்ளிகுளத்துார் ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட, ஒப்பந்தம் பெற்ற தனியார் நிறுவனம் மண் அள்ளி உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய, துறை சார்ந்த நிபுணர் ஒருவரை, அண்ணா பல்கலை டீன் ஹரிஹரன் நியமிக்க வேண்டும்.

‘நியமிக்கப்படும் நிபுணர், ஏரியில் நேரில் ஆய்வு செய்து, வரும் 20ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என, உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

Source link