சென்னை: 'தேர்தல் வரும் போது, கவர்ச்சிகரமாக பேசுவார்கள். மக்களை ஏமாற்றுவதில் நம்பர் ஒன் கட்சி திமுகதான்,'

சென்னை: ‘தேர்தல் வரும் போது, கவர்ச்சிகரமாக பேசுவார்கள். மக்களை ஏமாற்றுவதில் நம்பர் ஒன் கட்சி திமுகதான்,’ என்று எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.சாணக்யா யுடியூப் சேனலின் 7ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்றைய ஆட்சியாளர்கள் ஊடகவியலாளர்களை மிரட்டி, பணிய வைத்துள்ளதால் இந்த ஆட்சியில் நடக்கும் தவறுகளை வெளிப்படுத்த முடியாத நிலை ஊடகங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட்டன. இப்போது முதல்வர் தினமும் போட்டோசூட் எடுப்பார். அதுதான் பத்திரிகை, ஊடகங்களில் வருகிறது. தினந்தோறும் ஒரு திட்டத்தை அறிவிப்பார், பெயர் சூட்டுவார். அப்படித்தான் இந்த 5 ஆண்டுகளையும் ஓட்டிவிட்டார். ஒரு திட்டத்தை அறிவிப்பார், அதற்கு ஒரு குழு போடுவார், அந்தக் குழு அதோடு முடிந்துவிடும். 52 குழுக்கள் போட்ட ஒரே அரசாங்கம் இந்த விடியா திமுக அரசு தான். 52 குழுக்கள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடக் கேட்டேன். எந்த பதிலும் வரவில்லை. இப்படிப்பட்ட ஆட்சி தேவைதானா?

நம்பர் ஒன்

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2021ல் 525 அறிவிப்புகளை வெளியிட்டனர். அதில் நான்கில் ஒரு பங்கு அறிவிப்புகளைக் கூட நிறைவேற்ற வில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார்கள். ரகசியம் இருப்பதாக துணை முதல்வர் உதயநிதியும் கூறினார். நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியாது என்ற அந்த ரகசியத்தை போன கூட்டத் தொடரில் முதல்வர் ஸ்டாலின் போட்டு உடைத்து விட்டார். தேர்தல் வரும் போது, கவர்ச்சிகரமாக பேசுவார்கள். மக்களை ஏமாற்றுவதில் நம்பர் ஒன் கட்சி திமுகதான். நானும் அரசுப் பள்ளியில் படித்தவன். அரசுப் பள்ளியில் படித்தவர்கள் மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவை நிறைவேற்றும் விதமாக, மாற்று ஏற்பாடாகத் தான் 7.5 உள் இடஒதுக்கீட்டை கொண்டு வந்தேன். இதனால், 3000 அரசுப் பள்ளி மாணவர்கள் இன்று மருத்துவப் படிப்பு பயின்று வருகின்றனர்.

முதல்வராக இருக்கும் போது பிரதமரை சந்தித்தேன். மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் நீர், காவிரி வழியாக கடலில் கலக்கிறது. காவிரி ஆற்றின் இருகரைகளில் இருக்கும் நகரங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், காவிரி நீர் அசுத்தமாகிறது. இதனை சுத்தப்படுத்த வேண்டும். 20 மாவட்ட மக்கள் காவிரி ஆற்று நீரை குடிநீராதாரமாக கொண்டுள்ளனர். எனவே, அதனை சுத்தம் செய்ய நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை வடிவமைத்து பிரதமரிடம் கொடுத்தேன். அதனை பார்லியில் ஜனாதிபதியின் உரையில் இடம்பெறச் செய்து, அந்தத் திட்டத்தை மத்திய அரசு செய்து கொடுத்தது. 2024ம் ஆண்டு ரூ.11,250 கோடி இந்தத் திட்டத்திற்காக அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்தை தற்போது வரையில் திமுக அரசு நிறைவேற்றவில்லை. ஏனெனில் இது அதிமுக கொண்டு வந்தது என்பதால் தான். காழ்ப்புணர்ச்சியோடு செயல்படும் அரசு என்பதற்கு இது எல்லாம் ஒரு சான்று.

கல்வியில் புரட்சி

பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. கல்லூரிகள் அதிகளவில் திறக்கப்பட்டன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்ற சாதனையை அதிமுக ஆட்சியில் தான் செய்து காட்டினோம். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக்கல்லூரிகளைக் கொண்டு வந்து சாதனை படைத்தோம். 7 சட்டக்கல்லூரிகளும், 21 பாலிடெக்னிக், 4 பொறியியல் கல்லூரி, 4 வேளாண்மை கல்லூரி, 5 கால்நடை ஆராய்ச்சி மையங்கள் திறக்கப்பட்டன. 2011ல் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்கும் போது, தமிழகத்தில் 100க்கு 32 பேர் தான் உயர்கல்வி பயின்று இருந்தார்கள். அதன்பிறகு, 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சி, கல்வியில் கவனம் செலுத்தி, புரட்சி ஏற்படுத்தியதன் விளைவால், 2019-20ல் உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை 100க்கு 52 பேராக அதிகரித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 200க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட அரசாங்கம் தேவைதானா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கு அடியோடு அழிந்து விட்டது. 2 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இது அனைத்தும் போதை ஆசாமிகளால் தான் நடக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, 110 டன் கஞ்சாவையும், 3.6 லட்சம் போதை மாத்திரைகளும், 6,000 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்கிறார்கள். இவை அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டது மட்டும் தான். இந்தப் போதைக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் அடிமையாகின்றன. தங்கம், வெள்ளி நிலவரம் போல, கொலை நிலவரம் பார்க்கும் சூழல் உருவாகிவிட்டது. எவ்வளவு மோசமான அரசாங்கம். ஒரு திறமையற்ற முதல்வர் நாட்டை ஆள்வதாலும், மக்கள் மீது அக்கறையில்லாத முதல்வராலும் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன.

2022ம் ஆண்டு முதல்வரின் காவல்துறை மானியக்கோரிக்கை புத்தகத்தில், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் 2,348 பேர் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டது 148 பேர். மற்றவர்கள் எங்கே போனார்கள்? அவர்கள் எல்லாம் திமுககாரர்கள் தான். அப்படியிருக்கும் போது எப்படி கஞ்சாவை ஒழிப்பது.

சோதனைகள்

நான் ஆட்சிப் பொறுப்பேற்கும் போது பல்வேறு சோதனைகளை சந்தித்தேன். கொரோனா, உள்கட்சி பிரச்னை, வறட்சி, குடிநீர் பற்றாக்குறை நிலவியது. வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வந்து மக்களுக்கு வழங்கினோம். டெல்டா மாவட்டங்களில் புயலால் கடும் சேதம். அதிமுக திறமையாக செயல்பட்டு, நிவாரணப் பணிகளை மேற்கொண்டோம். கொரோனா சமயத்தில் 32 மாவட்டங்களுக்கும் சென்று கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி, மருத்துவ உதவிகளை செய்தோம்.

கொரோனாவால் ஒரு வருடம் அரசுக்கு ஒரு ரூபாய் வருமானம் கிடையாது. கொரோனாவுக்கு ரூ.40 ஆயிரம் கோடி செலவு. அப்படியிருந்தும் கடன் அதிகமாகவில்லை. தமிழகத்தை இதுவரை பல கட்சிகள் ஆண்ட நிலையில், கடைசியாக 2021ல் அதிமுக ஆட்சி நிறைவுடையும் போது, 4 லட்சத்து 85 ஆயிரம் கோடி கடன் இருந்தது. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்ற இந்த 5 வருடத்தில் 5 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்காங்க. திட்டம் ஏதுமில்லை. அதிமுக ஆட்சியில் இருந்த போது வந்த வருவாயை விட, திமுக ஆட்சியில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி கூடுதலாக வருமானம் வருகிறது. வருமானம் அதிகமாக இருந்தும், கடன், திட்டங்களை நிறைவேற்றாதது தான் திறமையற்ற அரசாங்கத்திற்கு சான்று. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால், வெறும் 50 ஆயிரம் பணியிடங்கள் தான் நிரப்பப்பட்டுள்ளன.

பொய்யில் வல்லவர்கள்

அதிமுக மேற்கொண்ட தொழில் முதலீடுகள் தான் தற்போதைய திமுக ஆட்சியைக் காப்பாற்றி வருகிறது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உற்பத்தி பெருகிவிட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். அனைத்தும் பொய். பொய் பேசுவதில் திமுகவினர் வல்லவர்கள். திமுக என்றால் ஊழல். எந்த மாநில அரசும் ஊழலுக்காக கலைக்கப்பட்டது கிடையாது. ஆனால், திமுக அரசு மட்டும் தான் ஊழலுக்காக கலைக்கப்பட்டது.

உதயநிதியை பிரபலப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறாரே தவிர, மக்களைப் பற்றிய எண்ணமே இல்லை. கருணாநிதி ஆட்சியில் சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது. அரிசி, கோதுமை, பூச்சிமருந்து, சர்க்கரை ஆகியவற்றில் பேரங்களில் ஊழல் நடந்தது. அதில், சர்க்கரை பேர ஊழலில் அரசு தாக்கல் செய்த அறிக்கையில், சர்க்கரை எல்லாம் எறும்பு தின்றுவிட்டது, சாக்குப்பையை கரையான் சாப்பிட்டு விட்டது. எப்படிப்பட்ட அறிக்கை?

அதனுடைய வாரிசு தானே ஸ்டாலின். அவர் எப்படி இருப்பார். விதை ஒன்னு போட்டால்… அப்படித்தானே இருக்கும். இந்தத் தேர்தலை பொறுத்தவரையில் குடும்ப ஆட்சிக்கும், வாரிசு அரசியலுக்கும் முடிவு கட்டும் தேர்தல். திமுகவில் கட்சிக்காக உழைத்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். ஸ்டாலின் அடிக்கடி நான் மிசாவில் சிறைக்கு சென்றவன் என்று கூறுகிறார். அந்தக் கட்சியுடன் (காங்கிரஸ்) நீங்கள் கூட்டணி வைத்துள்ளீர்கள்.

ஸ்டாலினுக்கு மறதி

திமுக கூட்டணியில் இன்னும் சலசலப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது. திமுக – காங்கிரஸ் இடையே 20 நாட்களாக வார்த்தைப் போர். ஆனால், பல பத்திரிகைகள் இந்த விவகாரத்தை இருட்டடிப்பு செய்து விட்டார்கள். ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி இதை வெளிவராமல் பார்த்துக் கொண்டார்கள். ஆனால், அதிமுக ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் விவாத மேடையில் பேசுவார்கள். இலவசமாக விளம்பரம் தேடி தருகிறார்கள். மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை.

தமிழகத்திற்கும், என்டிஏவுக்கும் தான் தேர்தல் என்று ஸ்டாலின் பேசி வருகிறார். நடப்பது தமிழக சட்டசபை தேர்தல் என்பதை மறந்து பேசி வருகிறார். அடிக்கடி ஸ்டாலினுக்கு மறதி அதிகம் என்று சொல்கிறார்கள். அது உண்மை தான் என்று புரிந்து கொள்கிறோம். அதிமுகவை எதிர்க்கவோ, குறை சொல்லவோ அவர்களால் முடியவில்லை. இதனால், அதிமுக மதவாத கட்சியுடன் கூட்டணி வைத்து விட்டது, அதிமுக பாஜவுக்கு அடிமை. இபிஎஸ் பாஜவுக்கு அடிமை, என்று சொல்வார்.


வளர்ச்சியடையாது

உங்களின் பொய் எல்லாம் மக்களுக்கு தெரியும். எத்தனையோ பிரச்னைக்கு மத்தியிலும் அதிமுக வலிமையோடு இன்று இருக்கிறது. நான் ஆட்சி செய்யும் போது சரி, இன்றும் சரி, பாஜ பொறுத்தவரையில் உணர்வு பூர்வமாக செயல்பட்டு வருகிறோம். ஆட்சியில் இருக்கும் போது, தமிழகத்திற்கு பல்வேறு உதவிகளை மத்திய அரசு செய்தது. இன்று கூட இந்தியாவில் ஒரு திட்டத்திற்கு ரூ.63 ஆயிரம் கோடியை ஒதுக்கியது மத்திய அரசு தான். அதை பெற்றது தமிழக அரசு தான்.

இதே காங்கிரஸ் ஆட்சியில் திமுக அரசாங்கம் எத்தனை நிதியை பெற்றது. குடும்ப உறுப்பினருக்கு மத்தியில் பதவியை பெற்றதே தவிர, மக்களுக்கு தேவையான திட்டங்களைப் பெறவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தார், அப்போது கூட அவர்களால் தமிழகத்திற்கு தேவையான நிதியைப் பெற முடியவில்லை. ஆனால், மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு, தமிழகத்திற்கு தேவையான நிதியையும், திட்டங்களையும் அதிமுக அரசு பெற்றது. அதிமுக ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி. பல்வேறு தேசிய விருதுகளைப் பெற்றோம்.

இன்று இருப்பது செயலிழந்த அரசாங்கமாக இருக்கிறது. இன்று வரை சட்டம் ஒழங்கிற்கு நிரந்தர டிஜிபி நியமிக்கப்படவில்லை. திமுக ஆட்சி இருக்கும் வரை மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. இந்த ஆட்சி இருக்கும் வரை தமிழகம் வளர்ச்சியடையாது, இவ்வாறு அவர் கூறினார்.

Source link