– நமது சிறப்பு நிருபர் -நாட்டில் சமையல் காஸ் சிலிண்டர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில்,

– நமது சிறப்பு நிருபர் –

நாட்டில் சமையல் காஸ் சிலிண்டர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ‘நுகர்வோர் மாற்று எரிசக்தி பயன்பாட்டுக்கு மாற வேண்டும்’ என, மத்திய அரசு வலியுறுத்திஉள்ளது.குறிப்பாக, குழாய் வழி இயற்கை எரிவாயு வசதி உள்ள பகுதிகளில் வசிப்போர், உடனடியாக அந்த இணைப்பிற்கு மாறும்படி அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.

மேற்காசிய பிராந்தியத்தில் நீடிக்கும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் வினியோக தொடரில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தட்டுப்பாடு

இதனால், உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும், சமையல் காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இந்திய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வர, ஈரான் அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.

இதைத் தொடர்ந்து ஒரு சில இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது. எனினும், உள்நாட்டு தேவை அதிகரிப்பால், சமையல் காஸ் சிலிண்டருக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு பிரச்னை இன்னும் சீராகவில்லை. தட்டுப்பாட்டை சமாளிக்க, ‘கெயில்’ எனப்படும் இந்திய எரிவாயு ஆணையம், நேற்று முன்தினம் முக்கிய நகரங்களில் உள்ள எரிபொருள் வினியோக நிறுவனங்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டது.

அப்போது எல்.பி.ஜி., எனப்படும் சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க, சாத்தியமான இடங்களில், பி.என்.ஜி., எனப்படும் குழாய் வழி காஸ் இணைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டது. இந்நிலையில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணை செயலர் சுஜாதா சர்மா, மாற்று எரிசக்தி பயன்பாட்டுக்கு நுகர்வோர் மாற வேண்டும் என வலியுறுத்திஉள்ளார்.

தற்காலிக அனுமதி

இது குறித்து அவர் கூறியதாவது: நாடு முழுதும் தற்போது 1.50 கோடி பி.என்.ஜி., நுகர்வோர் உள்ளனர். அவர்களுக்கு தங்குதடையற்ற வினியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.தவிர 60 லட்சம் நுகர்வோருக்கு பி.என்.ஜி., வசதி இருந்தும் அவர்கள் அதற்கு மாறவில்லை. இந்த இக்கட்டான சூழலில், அவர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

டில்லி, அதை சுற்றியுள்ள தலைநகர் பிராந்தியத்தில் தொழில்துறை மற்றும் ஹோட்டல்களில் அடுப்புக் கரி, மண்ணெண்ணெய், வேளாண் கழிவு, மரத்துாள், விறகு போன்ற மாற்று எரிசக்தி பயன்படுத்திக் கொள்ள ஒரு மாதத்திற்கு தற்காலிக அனுமதி தரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். புதிய பி.என்.ஜி., இணைப்பு பெற நுகர்வோர் 5,000 முதல் 7,000 ரூபாய் வரை டிபாசிட் தொகை செலுத்த வேண்டும். தற்போதைய சூழலில், புதிய இணைப்பிற்கு மானியம் வழங்குப்படுமா என்ற கேள்விக்கு, சுஜாதா பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

வேகமெடுக்கும் இணைப்புகள்

எரிவாயு கட்டமைப்பு தொடர்பாக சமீபத்தில் லோக்சபாவில் பேசிய மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, ‘நகர்ப்புற எரிவாயு வினியோக கட்டமைப்பு வலுப்படுத்துவது தொடர் நடவடிக்கை. அந்த வகையில் 2034ம் ஆண்டுக்குள் குறைந்தபட்ச பணி திட்டத்தின் கீழ் நாடு முழுதும் புதிதாக 12.6 கோடி பி.என்.ஜி., எனப்படும் குழாய் வழி எரிவாயு இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் கடந்த ஆண்டு நவ., மாத இறுதி வரை 1.58 கோடி நுகர்வோருக்கு பி.என்.ஜி., இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதே போல், 8,456 சி.என்.ஜி., எனப்படும், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையங்களும், 6.29 லட்சம் அங்குல கி.மீ., துாரத்திற்கு குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளன.
நகர்ப்புற எரிவாயு வினியோக கட்டமைப்பில் தமிழகம் அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது. 2024 மார்ச்சில் 30,525 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், 2025, மார்ச்சில் இணைப்பின் எண்ணிக்கை 79,218 ஆக அதிகரித்தது. தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் புதிதாக 1,18,905 நுகர்வோருக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

Source link