மேற்கு வங்கத்தில் பா.ஜ.,- திரிணமுல் காங். இடையே மோதல் அடிதடி!

கொல்கட்டா : மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில், பிரதமர் நரேந்திர மோடியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் துவங்குவதற்கு சரியாக அரை மணி நேரத்துக்கு முன், ஆளும் திரிணமுல் காங்., – எதிர்க்கட்சியான பா.ஜ., தொண்டர்கள் இடையே குடுமிப்பிடி சண்டை நடந்தது. இரு தரப்பும் ஒருவரையொருவர் கற்களால் தாக்கிக் கொண்டதால் பதற்றம் நிலவியது. மேலும் இந்த சண்டையில், அமைச்சர் சசி பாஞ்சா வீட்டின் மீது கற்களை வீசி தாக்கியதில், ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு தமிழகத்துடன் சேர்த்து அடுத்த மாதம் தேர்தல் நடக்கிறது.

இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் திரிணமுல் காங்., – எதிர்க்கட்சியான பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், மேற்கு வங்க தலைநகர் கொல்கட்டாவுக்கு நேற்று வந்த பிரதமர் மோடி, 18,680 கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, கொல்கட்டாவில் உள்ள பிரிகேட் மைதானத்தில் நடந்த பா.ஜ., பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்றார்.


மோதல்

இந்த பொதுக்கூட்டம் துவங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன், கொல்கட்டாவில் உள்ள கிரிஷ் பார்க், பவுபஜார் ஆகிய பகு திகளில், திரிணமுல் காங்., – பா.ஜ., தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இந்த பகுதிகள், பொதுக்கூட்டம் நடந்த பிரிகேட் மைதானத்தில் இருந்து, 5 கி.மீ., தொலைவில் உள்ளன.

பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, பவுபஜார் பகுதி வழியாக பா.ஜ.,வினர் வந்தனர். அப்போது, அவர்களுக்கும், திரிணமுல் காங்., தொண்டர் களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது .

இருதரப்பும் ஒருவரையொருவர் கற்களால் தாக்கிக் கொண்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர்.

இந்த தாக்குதலில், போலீசார் சிலர் காயமடைந்தனர். மேலும், வட கொல்கட்டா மாவட்ட பா.ஜ., தலைவர் தமக்னோ கோஷ் மற்றும் பலர் காயமடைந்தனர். பா.ஜ., தொண்டர்களை ஏற்றி வந்த பஸ்கள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வெடிகுண்டுகள்

இதே போல், கிரிஷ் பார்க் பகுதியிலும் திரிணமுல் காங்., – பா.ஜ., தொண்டர்கள் இடையே மோதல் வெடித்தது. இதில், அப்பகுதியில் உள்ள மாநில அமைச்சர் சசி பாஞ்சா வீட்டின் மீது கற்கள் வீசப்பட்டன. இதில், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் சுக்குநுாறாகின.

இது குறித்து, அமைச்சர் சசி பாஞ்சா கூறுகை யில், “பா.ஜ., குண்டர்கள் திட்டமிட்டு என் வீட்டை தாக்கி உள்ளனர். ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளன. பா.ஜ.,வினர் வந்த பஸ்களில் செங்கற்கள், பாட்டில்கள் மற்றும் வெடிகுண்டுகள் எடுத்து வரப்பட்டன,” என்றார்.

மோதல் நடந்த பகுதிகளில், ‘பா.ஜ.,வை புறக்கணிப்போம்’ என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததாகவும், அவ்வழியாக சென்ற பா.ஜ.,வினர் அவற்றை கிழித்த போது, திரிணமுல் காங்., தொண்டர்களுடன் மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டுகளை பா.ஜ., திட்டவட்டமாக மறுத்துள்ளது. ‘பொதுக்கூட்டத்துக்கு சென்ற எங்கள் மீது வேண்டுமென்றே திரிணமுல் காங்கிரசார் கற்களை வீசி தாக்கினர். நாங்கள் வந்த பஸ்களை தாக்கினர். மோதலை தடுத்து நிறுத்தாமல் போலீசார் வேடிக்கை பார்த்தனர்’ என, பா.ஜ., நிர்வாகிகள் குற்றஞ்சாட்டினர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து கிரிஷ் பார்க், பவுபஜார் பகுதிகளில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டன. கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து, பிரிகேட் மைதானத்தில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:


இனி அவர்களுக்கு இங்கு இடமில்லை.

மேற்கு வங்கத்தில், ஊடுருவல்காரர்களின் ஓட்டு வங்கியை பாதுகாக்கவே ஆளும் திரிணமுல் காங்., வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை எதிர்க்கிறது. வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை நீக்க அக்கட்சி விரும்பவில்லை.

கட்டுப்பாடற்ற ஊடுருவலால், மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் மக்கள் தொகை சமநிலை மாறியுள்ளது. சில இடங்களில் ஹிந்துக்கள் திட்டமிட்டு சிறுபான்மையினராக மாற்றப்படுகின்றனர். மம்தா பானர்ஜி அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. வரும் தேர்தலில் அவரை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர்.

அவரது அரசு ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளின் துணையுடன் இயங்குகிறது. லஞ்சம் மற்றும் கட்டப்பஞ்சாயத்து தான் அவர்களின் வருமானம். இனி அவர்களுக்கு இங்கு இடமில்லை. தங்களுக்கு ஓட்டளிக்காதவர்களை, ‘அன்னியர்’ என, திரிணமுல் காங்., முத்திரை குத்துகிறது.

தேர்தல் கமிஷன் போன்ற தன்னாட்சி அமைப்புகளை மம்தா அரசு தொடர்ந்து அவமதிக்கிறது. வரும் தேர்தல், வெறும் ஆட்சியை மாற்றுவதற்காக மட்டுமல்ல, மேற்கு வங்கத்தின் ஆன்மாவை காப்பதற்கும், ஊழல் கலாசாரத்தில் இருந்து விடுதலை பெறுவதற்குமானது.

இவ்வாறு அவர் பேசினார்.

ரூ.18,680 கோடி திட்டங்கள் மே.வங்கத்தில் துவக்கி வைப்பு மேற்கு வங்கத்தில், 18,680 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை, ரயில்வே மற்றும் துறைமுகத் திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். 231 கி.மீ., நீளமும், நான்கு வழிப்பாதையும் கொண்ட காரக்பூர்- – மோரேகிராம் பொருளாதார வழித்தடத்தின் ஐந்து பிரிவுகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இது பயண துாரத்தை, 120 கி.மீ., குறைப்பதுடன், பயண நேரத்தை 7 – 8 மணி நேரம் வரை மிச்சப்படுத்தும். இதனால், மேற்கு மெதினிபூர், பாங்குரா, ஹூக்ளி, கிழக்கு வர்தமான், பிர்பும், முர்ஷிதாபாத் உள்ளிட்ட மாவட்டங்கள் பயனடையும். புருலியா — ஆனந்த் விஹார் டெர்மினல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையையும் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். மறுசீரமைக்கப்பட்ட காமக்யாகுரி, அனாரா, தம்லுக், ஹால்டியா, பாராபும், சியூரி ஆகிய ஆறு ரயில் நிலையங்களையும், பெல்டா – தான்தன் இடையிலான, 16 கி.மீ., மூன்றாவது ரயில் பாதையையும் அவர் திறந்து வைத்தார். கொல்கட்டாவில், நதி சுற்றுலா வசதி மற்றும் கப்பல் முனையம் அமைப்பதற்கான பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினர்.

சில்சார் – ஷில்லாங் விரைவு சாலைக்கு அடிக்கல் வடகிழக்கு மாநிலமான அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கும், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இம்மாநிலத்துக்கு நேற்று வந்த பிரதமர் மோடி, கச்சார் மாவட்டத்தின் சில்சார் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில், 23,550 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்தார். அசாமின் சில்சார் – மேகாலயாவின் ஷில்லாங் வரை, 22,864 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அதிவேக விரைவு சாலைக்கு அவர் அடிக்கல் நாட்டினார். 166 கி.மீ., நீளமுள்ள இந்த சாலை, குவஹாத்தி – -சில்சார் இடையிலான பயண நேரத்தை, எட்டரை மணி நேரத்திலிருந்து ஐந்து மணி நேரமாகக் குறைக்கும். சில்சாரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 565 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள மேம்பாலத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். கரீம்கஞ்ச் மாவட்டத்தின் பத்தர்கண்டியில், 122 கோடி ரூபாய் செலவில் அமையவுள்ள புதிய வேளாண் கல்லுாரிக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

Source link