மேற்காசிய பிராந்திய போரால் அமெரிக்காவுக்கு லாபம்!: பணத்தில் மிதக்க போகும் ஆயுத நிறுவனங்கள்

— நமது சிறப்பு நிருபர் -:

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம், வருங்காலத்தில் ஆயுத விற்பனையை அதிகரிக்கப் போகிறது. அப்போது, லாபத்தில் மிதக்கப் போவது அமெரிக்க நிறுவனங்களாகவே இருக்கும் என, தகவல் வெளியாகி உள்ளது. மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து பிப்., 28ல் நடத்திய அதிரடி தாக்குதல், ஒட்டுமொத்த உலகையும் போர் சூழலுக்குள் தள்ளி இருக்கிறது.

ஈரான் உச்ச தலைவராக இருந்த அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து தீவிரமடைந்த சண்டை, எல்லை மோதலாக நின்று விடாமல், ஆட்சி மாற்றத்தை வித்திடும் முனைப்பிற்கு மாறி உள்ளது.

இஸ்ரேலை மட்டும் குறிவைக்காமல், ராணுவ தளங்கள் அமைக்க அமெரிக்காவுக்கு இடம் கொடுத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஈராக் என அண்டை நாடுகளின் மீதும் ஏவுகணைகளால் துளைத் தெடுத்து வருகிறது ஈரான்.

ஏவுகணை

இதனால், இந்த போர் மேற்காசியாவை கடந்து, ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையிலான போர் எப்போது முடியும்; வெற்றி பெறப்போவது யார் என்பது கணிக்க முடியாததாக இருக்கிறது.

எனினும், இந்த போரால் ஒருதரப்பு பெரும் லாபத்தை ஈட்டப் போகிறது. குறிப்பாக, உலகளாவிய ராணுவ துறைக்கு பணம் கொட்டப் போகிறது.

லாக்ஹீட் மார்டின், பி.ஏ.இ., சிஸ்டம்ஸ், ஆர்.டி.எக்ஸ் – ரேதியான் போன்ற அமெரிக்க ராணுவ ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது ஆயுத உற்பத்தித் திறனை நான்கு மடங்காக உயர்த்த அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

போர் துவங்கிய ஒருசில நாட்களுக்குள்ளாகவே மேற்காசிய நாடுகளும், அமெரிக்கப் படைகளும், 1,000க்கும் மேற்பட்ட, ‘பேட்ரியாட்’ ஏவுகணைகளை பயன்படுத்தின. தற்போது அதன் தேவை அதிகரித்து இருப்பதால், அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் விண்ணை தொட்டுள்ளன.

இந்த சூழலில், உலகளாவிய ஆயுத சந்தை பற்றிய அறிக்கையை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது.

அந்த அறிக்கை, நம் நாட்டின் நிலையை துல்லியமாக படம்பிடித்து காட்டுகிறது. உலகளவில், ஆயுத இறக்குமதியில் உக்ரைனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் நம் நாடு இருக்கிறது.

நம் நாடு, ஆயுத இறக்குமதியில் ரஷ்யாவை சார்ந்திருப்பதை கடந்த 10 ஆண்டுகளில் வெகுவாக குறைத்துள்ளது. குறிப்பாக, 2011 – 15 கால கட்டத்தில் ரஷ்யாவிடம் இருந்து, 70 சதவீத ஆயுதங்களை இறக்குமதி செய்தோம்.

முன்னுரிமை

அதுவே, 2021 – 25 கால கட்டத்தில், 40 சதவீதமாக சரிந்தது. நவீன ஆயுதங்களை பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடம் வாங்குவதை நம் நாடு அதிகப்படுத்தியதே இதற்கு காரணம்.

நம் அண்டை நாடுகளான சீனா மற்றும் பாக்., உடனான எல்லை பிரச்னைகளால், ஆயுதங்களை அதிகளவு இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

ஆயுத உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டும் என்ற முனைப்புடன் நாம் ஒருபுறம் முன்னேறினாலும், உலகளாவிய வினியோக தொடரில் ஏற்படும் பாதிப்புகள், நம் நாட்டை நிச்சயம் வெகுவாக பாதிக்கும் என, ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கிறது.

சரி, தற்போதைய சூழலுக்கு வருவோம். ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா மோதலால் ஏற்பட்டிருக்கும் ஒருவிதமான பதற்றமும் நெருக்கடியும், அதிநவீன ஆயுத தேவைக்கு அமெரிக்கா பக்கமே மீண்டும் ஒருமுறை சாய வேண்டும் என்ற ஆர்வத்தை மேற்காசிய நாடுகள் மத்தியில் துாண்டி விட்டுள்ளது.

எனவே, போர் முடிவுக்கு வரும் போது, புனரமைப்பு பணிகள் மற்றும் ஆயுத ஒப்பந்தங்களில் அமெரிக்க நிறுவனங்களுக்கே முன்னுரிமை கிடைக்கும். இதனால், அந்நிறுவனங்களுக்கு லாபம் கொட்டப் போகிறது என, ராணுவ ஆய்வாளர்கள் கணித்து உள்ளனர்.

‘மிஷன் சுதர்சன சக்கரம்’

நவீன கால போர் சூழலை சமாளிக்க, இஸ்ரேலின், ‘அயன் டோம்’ போன்ற வான் பாதுகாப்பு கவசம் நம் நாட்டிற்கு அவசியம் தேவை. தற்காப்பு கடந்து தாக்குதலுக்கும் அந்த கவசம் பயன்பட வேண்டும். அப்படியொரு வான் பாதுகாப்பு கவசம் தான், ‘மிஷன் சுதர்சன சக்கரம்’. கடந்த ஆண்டு நடந்த சுதந்திர தின விழாவில், இந்த தொலைநோக்கு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 2035க்குள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பன்முக வான் பாதுகாப்பு கவசம் மூலம், நம் நாட்டை முழுமையான பாதுகாப்பு கொண்ட நாடாக மாற்றுவதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம். சுதர்சன சக்கர அமைப்பு, இஸ்ரேலின் அயன் டோம் போல நிலம், வான், கடல் என மூன்று பகுதிகளையும் உள்ளடக்கி நம் நாட்டை பாதுகாக்கும். ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மட்டும் சார்ந்திருக்காமல், அதனால் இயக்கப்படும் கண்காணிப்பு அமைப்புகள், சைபர் பாதுகாப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை யும் ஒருங்கிணைக்கிறது. அதாவது, ஐ.ஏ.டி.டபிள்யு.எஸ்., எனப்படும் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பு; க்யூ.ஆர்.எஸ்.ஏ.எம்., எனப்படும் நிலத்தில் இருந்து வானில் உள்ள இலக்குகளை விரைவாக தாக்கும் ஏவுகணைகள் கொண்ட தொகுப்பு, மிகக் குறுகியதுார வான் பாதுகாப்பு அமைப்புகள் என, பன்முக கட்டமைப்பு கொண்டது. சுதர்சன சக்கரம் திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம், ராணுவத் துறையில் நம் நாடு ஆயுத இறக்குமதியை வெகுவாக குறைத்து, சொந்த தொழில்நுட்பத்தை வலுப்படுத்த முடியும். அ ண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களை சமாளித்து, பிராந்திய அளவில் வலுவான தடுப்பு சக்தியாக உருவெடுக்கும். ராணுவ தளவாடங்கள் மட்டுமின்றி, வழிபாட்டு தலங்கள், பொது இடங்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும். இத்திட்டம் 2035க்குள் முழுமை பெறும்போது, வான்வழித் தாக்குதல்களில் நம் நாடு உலகிலேயே மிகச்சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டதாக மாறும். தவிர, தேச பாதுகாப்பின் தற்சார்பு பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும்.

Source link