கொச்சி: ‘டிஜிட்டல் கைது’ மோசடியில் சிக்கி 81 வயது முதியவர் இழந்த 1 கோடி ரூபாயை, கேரள மாநில சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.
கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த 81 வயது முதியவர் ஒருவரை கடந்தாண்டு நவம்பரில் மர்ம நபர்கள் தொடர்பு கொண்டனர். மொபைல் போன் மூலம் பேசிய அவர்கள், தங்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக்கொண்டு, சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாக கூறி முதியவரை டிஜிட்டல் கைது செய்துள்ளதாக கூறினர்.
அவரிடம் இருந்து 1.30 கோடி ரூபாயை மிரட்டி பறித்த மர்ம நபர்கள், பின் முதியவருடனான தொடர்பை துண்டித்தனர்.
இது குறித்து, கொச்சி நகர சைபர் கிரைம் போலீசாரிடம் முதியவர் புகார் அளித்தார். அவரது புகார் தேசிய சைபர் கிரைம் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது. மோசடி தொடர்பான விசாரணையும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது.
தொழில்நுட்ப ரீதியாகவும் விசாரணை செய்யப்பட்டது. இதன் முடிவில், ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் வங்கி ஒன்றில் செலுத்தப்பட்ட முதியவரின் 1.06 கோடி ரூபாயை கொச்சி நகர சைபர் கிரைம் போலீசார் மீட்டனர். நீதிமன்ற உத்தரவை அடுத்து அந்த பணம் முதியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சைபர் மோசடி வழக்குகளில், பணத்தை இழந்த உடனேயே போலீசாரை அணுகி, தேசிய சைபர் குற்ற இணையதளம் வாயிலாக புகார்களை பதிவு செய்தால், இழந்த தொகையை மீட்க முடியும் என போலீசார் தெரிவித்தனர்.
