ஓயாத 'கசமுசா!':காங்கிரசுக்கு கூடுதலாக மூன்று தொகுதிகள்: திமுக கூட்டணியில் புகைச்சல்

— நமது நிருபர் — காங்கிரஸ் கட்சிக்கு, ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகளை விட கூடுதலாக மூன்று தொகுதிகளை தி.மு.க., தலைமை விட்டுக் கொடுத்ததால், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. தங்களுக்கும் கூடுதல் தொகுதிகளை கொடுக்க வேண்டும் எனக்கேட்டு, கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றன;

இதனால், கூட்டணிக்குள் ‘கசமுசா’ நிலவுகிறது. தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு, கடந்த 2021 தேர்தலை விட தற்போது கூடுதலாக மூன்று தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. ம.தி.மு.க.,வுக்கு நான்கு தொகுதிகளை ஒதுக்கி, அதில் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கூட்டணிக்குள் புதிதாக இணைந்த தே.மு.தி.க.,வுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கிய நிலையில், கணிசமான தொகுதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இதனால், ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் தொகுதிகளை குறைக்க தி.மு.க., முடிவு செய்துள்ளது.

அதன்படி, நீண்ட காலமாக கூட்டணியில் இருக்கும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுக்கு தொகுதிகள் குறைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால், கூட்டணிக்குள் இரண்டாவது பெரிய கட்சி என கூறிக்கொள்ளும் விடுதலை சிறுத்தைகள், இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை எதிர்பார்க்கிறது.

கடந்த சட்டசபை தேர்தலில் ஆறு தொகுதிகளை வழங்கிய தி.மு.க., இம்முறை, கூடுதலாக ஒரு தொகுதியை சேர்த்து ஏழு தொகுதிகளை விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்க தயாராக உள்ளது.

கடந்த தேர்தலை காட்டிலும் வி.சி., வளர்ந்துள்ளது. அதேநேரம், புதியவர்களுக்கும் பெண்களுக்கும் இம்முறை கட்டாயம் வாய்ப்பு தர வேண்டி உள்ளது. அதனால், இம்முறை 10 தொகுதிகளிலாவது வி.சி.,க்கள் போட்டியிட வேண்டும் என, அக்கட்சியின் நிர்வாகிகள், திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

அதனால், தி.மு.க.,விடம் குறைந்தது 10 தொகுதிகளாவது பெற வேண்டும்; 10க்கும் குறைவான இடங்களை தி.மு.க., வழங்கினால் ஏற்கக்கூடாது எனவும் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

வி.சி., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

தி.மு.க., கூட்டணியில் வெகு காலமாக விசுவாசத்துடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருந்து வருகிறது. நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறினால், 15 சதவீத ஓட்டுகளை தி.மு.க., இழக்க நேரிடலாம். இது, தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பை, மிகப்பெரிய அளவில் பாதிக்கும். தி.மு.க., தலைமை, தே.மு.தி.க.,வை விட விடுதலை சிறுத்தைகள் கட்சியை குறைத்து மதிப்பிடுவதே, தவறான அணுகுமுறைக்கு காரணம்.

வி.சி., கட்சிக்கு ராஜ்யசபா ‘சீட்’ வழங்காத நிலையில், இரட்டை இலக்கத்தில், குறைந்தது 10 தொகுதிகளையாவது வழங்க வேண்டும். அப்படி ஒதுக்க மறுத்தால், தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறி, தேர்தலை புறக்கணிக்கலாம் என திருமாவளவனிடம் தெரிவித்துள்ளோம். அவர் நல்ல முடிவெடுத்து அறிவிப்பார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதேபோல, தி.மு.க., கூட்டணிக்குள் மா.கம்யூ., கட்சியும் கூடுதல் தொகுதிகள் கேட்டு உரிமைக்குரல் எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக, அக்கட்சியின் மாநில செயலர் சண்முகம் நேற்று அளித்த பேட்டி:

கடந்த 2021 சட்டசபைத் தேதலில், தி.மு.க., கூட்டணி சார்பில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்டோம். வரும் தேர்தலில் இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என, கட்சியில் இருப்போர் அனைவரும் விரும்புகின்றனர். அதை தி.மு.க.,விடம் தெரிவித்து விட்டோம். கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்திருப்பதால், கூடுதல் தொகுதிகள் தருவது சிரமம் என, தி.மு.க., கூறி வருகிறது.

ஆனாலும், கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் காங்கிரசுக்கு மட்டும் எப்படி கூடுதல் தொகுதிகள் ஒதுக்க முடிந்தது? அதுமட்டுமல்ல, அக்கட்சிக்கு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க., கூட்டணியில் புதிய வரவான தே.மு.தி.க.,வுக்கும் அதிக தொகுதிகள் வழங்கப்பட இருப்பதாக செய்திகள் வருகின்றன. எனவே, அவர்களுக்கு கூடுதலாக தர வாய்ப்பு இருக்கும்போது, காலம் காலமாக கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மட்டும், உரிமையை மறுப்பதில் எந்த நியாயமும் இல்லை.

மதவாத சக்திகளை எதிர்த்து போராடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு மா கம்யூ., பலத்திற்கு ஏற்ப, தொகுதிகளை வழங்குவதும் முக்கியம். எங்களுக்கு தொகுதிகள் குறைக்கப்பட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, கட்சியின் மாநிலக் குழுவில் ஆலோசித்து முடிவெடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தொகுதிகளை குறைத்துக் கொடுக்க தி.மு.க., தலைமை முடிவெடுத்து, அதை தெரிவித்து விட்டது. அக்கட்சியின் எதிர்பார்ப்பும் கூடுதல் எண்ணிக்கையாக இருப்பதால், அக்கட்சி தலைவர்களும், தி.மு.க., தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர்.

***

Source link