மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கானாங்காடு கிராமத்தில், 30க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த கானாங்காடு கிராமத்தில் சுமார் 2000க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் 30க்கும் மேற்பட்டோர் சிறுநீரக பாதிப்படைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊராட்சி சார்பில் வழங்கும் குடிநீரில் உப்பு தன்மை அதிகமாக இருப்பதே காரணம் என கூறப்படுகிறது.
அப்பகுதி மக்கள் கூறுகையில், பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவ பரிசோதனை செய்தபோது உப்பு நீர் அதிகமாக இருப்பதால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இதில் சிலர் டயாலிஸ் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் சிறுநீரக பாதிப்பு தெரியாமலே இறந்துள்ளனர். அதனால், கானாங்காடு ஊராட்சியில் மருத்துவ முகாம் அமைத்து மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், கானகாடு ஊராட்சிக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
