தஞ்சாவூர்: துணை முதல்வர் உதயநிதி சமீபத்தில் திறந்து வைத்த புதிய பஸ் ஸ்டாண்ட், பயன்பாட்டிற்கு வரும் முன்பே, மேற்கூரையின் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, நரியம்பாளையத்தில், நகராட்சி சார்பில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்டை, பிப்., 15ல் துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். ஒரு மாத காலமாகியும், பஸ் ஸ்டாண்டிற்கு போதிய சாலை வசதி அமைக்கப்படாமல், கட்டுமானங்கள் முடியாத நிலையில், அவசர கதியில் திறக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், நேற்று மதியம், பஸ் ஸ்டாண்ட் உட்புற மேற்கூரையின் சிமென்ட் காரை, திடீரென பெயர்ந்து விழுந்தது. நகராட்சி அதிகாரிகள், அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘பஸ் ஸ்டாண்ட், செயல்பாட்டிற்கு வராத நிலையில், பல இடங்களில் விரிசல் உள்ளது.
தற்போது, சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்துள்ளது. கட்டுமானத்தின் தரத்தை, கலெக்டர் முழுமையாக ஆய்வு செய்து, கான்ட்ராக்டர், நகராட்சி அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும்’ என்றனர்.
