அவனியாபுரம்: ''உலகின் பல பகுதிகளுடன் இணைப்பதால் வர்த்தகம், முதலீடு பெருகி மதுரை வளர்ச்சி காணும்,'' என,

அவனியாபுரம்: ”உலகின் பல பகுதிகளுடன் இணைப்பதால் வர்த்தகம், முதலீடு பெருகி மதுரை வளர்ச்சி காணும்,” என, மதுரையில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சரபு ராம்மோகன் நாயுடு பேசினார்.

‘மதுரை சர்வதேச விமான நிலையம்’ அறிவிக்கும் நிகழ்ச்சி மதுரையில் நடந்தது. இந்திய விமான நிலையம் ஆணைய சேர்மன் விபின் குமார் வரவேற்றார். மத்திய அமைச்சர் முருகன் முன்னிலை வகித்தார். 94.37 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட, புதிய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தை திறந்து வைத்து, அமைச்சர் கிஞ்சரபு ராம்மோகன் நாயுடு பேசியதாவது:

தமிழகத்தின் கலாசார தலைநகரான மதுரைக்கு உலகின் பல பகுதிகளில் இருந்தும் வருகின்றனர். உலகில் உள்ளவர்கள் மீனாட்சி அம்மனை தரிசிக்கவும், மதுரை மல்லி உலகம் முழுதும் செல்லவும் சர்வதேச தரம் அளிக்கப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள உயர் ரக பூக்களின் சந்தை, உலகம் வரை சென்றடைய வேண்டும். சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்படுவதற்கு முன், 24 மணி நேரமும் செயல்படும் நிலையமாக அறிவிக்கப்பட்டது.

உலகின் பல பகுதிகளுடன் இணைப்பதால் வர்த்தகம், முதலீடுகள் பெருகி மதுரை வளர்ச்சி காணும். இந்நோக்குடன், 3 தசாப்தங்களாக விடுக்கப்பட்டு வந்த கோரிக்கையை தற்போது நிறைவேற்ற முடிந்தது. இதற்கு மீனாட்சியின் ஆசியும் காரணம்.

தமிழகத்திற்கு முன்னுரிமை மதுரை விமான நிலையத்தை 2013 – 14ல் 6 லட்சத்து 70 ஆயிரம் பயணிகள் பயன்படுத்திய நிலையில், தற்போது 14 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். 12 ஆண்டுகளுக்கு முன் வசதிபடைத்தோர் மட்டுமே விமானத்தில் செல்ல முடிந்தது.

பிரதமர் மோடியின் ஆட்சியில் சாதாரண மக்களும் விமானத்தில் செல்ல முடிகிறது. 2014ல் நாடு முழுதும் 74 விமான நிலையங்கள் இருந்த நிலையில் தற்போது 166 நிலையங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

புதிய திட்டங்கள் பல தமிழகத்திற்கே முதலில் வருகின்றன. மாநில அரசு செயல்படுத்த முனைப்புடன் இருந்தால் நிதி வழங்கப்படுகிறது. இது பிரதமருக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள வலுவான தனிப்பட்ட பிணைப்பு. அதனால் தான் தமிழகத்திற்கு எப்போதும் முன்னுரிமை கொடுக் கிறார்.

விமான நிலைய வளர்ச்சிக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் அது அமைந்துள்ள நகரின் பொருளாதார வளர்ச்சி மூலம் பத்து மடங்கு கிடைக்கிறது. வருங்காலத்தில் சர்வதேச விமானங்களை மதுரையில் இயக்குவதற்கு முயற்சிகள்மேற்கொள்ளப்படும். இவ்வாறு பேசினார்.

மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் நன்றி கூறினார்.எம்.பி.,க்கள் விருதுநகர் மாணிக்கம் தாகூர், மதுரை வெங்கடேசன், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா, விமான போக்குவரத்து அமைச்சக இணைச் செயலாளர் ரூபினா அலி, தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ரத்தினவேல், பா.ஜ., மாநில செயலாளர் கதலி நரசிங்க பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உரிமை மீறல் குறித்து புகார்

நேற்று நடந்த நிகழ்ச்சி அழைப்பிதழில் மதுரை, விருதுநகர் எம்.பி.,க்கள் பார்லி.,யில் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டதால் அவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் மாணிக்கம் தாகூர், ‘மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது குறித்த விளம்பரம், விதிமுறை மீறலை பிரதிபலிக்கிறது. எம்.பி.,களுக்காக வகுக்கப்பட்ட விதிமுறைகள் பின்பற்றவில்லை. இந்திய விமான நிலைய ஆணையம் மக்கள் பிரதிநிதிகளை எவ்வாறு நடத்தினாலும், மக்கள் நலனை விட மேலோங்கி நிற்பதை அனுமதிக்க மாட்டோம். அவமதிப்பை புறந்தள்ளி, நிகழ்வில் பங்கேற்போம்.
இருப்பினும் இந்த விதிமுறை மீறலை கண்டித்து சம்பந்தப்பட்ட பார்லி., அதிகாரிகள் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வருவேன்’ என குறிப்பிட்டிருந்தார். தங்கள் பெயர் இல்லாததை சுட்டிக்காட்டி ‘எக்ஸ்’ தளத்தில் ஆதங்கம் தெரிவித்த இரு எம்.பி.,க்கள், சர்வதேச விமான நிலையமாக்கியதில் தங்களுக்கும் பங்கு உண்டு என்றுக்கூறி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதில் பேசிய எம்.பி., வெங்கடேசன், ‘இரு மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற ஒரு அரசு நிகழ்ச்சியில், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட எம்.பி.,க்கள் பங்கேற்பது இதுவாகதான் இருக்கும்’ என்றார்.

Source link