இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஆனால் இன்னும் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் முடிவுக்கு வந்தபாடில்லை.
குறிப்பாக திமுக கூட்டணியின் முக்கிய கட்சிகளான விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு இழுபறியாகவே இருக்கிறது.
இந்த நிலையில், சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு செய்தியாளார்களைச் சந்தித்த அவர், “தமிழக மக்களைக் காக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், எங்களுக்குக் கூடுதலாக மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
அந்தத் தொகுதிகளை நாங்கள் முழு மனநிறைவோடு ஏற்றுக்கொண்டிருக்கிறோம். காங்கிரஸ் கட்சிக்குக் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை மற்ற கட்சிகள் விவாதப் பொருளாக்குவது முறையல்ல.
தி.மு.க கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் போன்ற தோழமைக் கட்சிகள் தங்களுக்குக் கூடுதல் இடங்கள் வேண்டும் எனக் கேட்பது ஒருபுறம் இருந்தாலும், அவர்கள் காங்கிரஸ் கட்சியை மையப்படுத்தி கேள்வி எழுப்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தோழமைக் கட்சிகள் தாராளமாகத் தங்கள் உரிமையைக் கேட்கலாம். மாண்புமிகு முதலமைச்சருக்குப் பெரிய மனமிருக்கிறது, வாய்ப்பிருந்தால் நிச்சயம் வழங்குவார்.

அதே சமயம், காங்கிரஸ் கட்சிக்கு ஏன் இத்தனை இடங்கள் வழங்கப்பட்டன என்பதைத் தோழமைக் கட்சிகள் எங்களின் கடந்த காலத் தியாகங்களைப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு காலத்தில் 110 தொகுதிகளில் போட்டியிட்ட நாங்கள், பிறகு 63, 41, தற்போது 25 எனத் தொடர்ந்து எங்களின் எண்ணிக்கையை விட்டுக் கொடுத்து வந்துள்ளோம். எங்களின் இந்த வேதனையை மற்றவர்கள் உணர வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
